திருச்சி சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
திருச்சி, மே 11- திருச்சி தில்லைநகர் சாலை ரோடு, கோஹினூர் சிக்னல் அருகே "Le Temps fort" என்ற அதிநவீன சொகுசு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு, 8.30 மணியளவில், ஓட்டலின், 4வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்தபடி, ஓட்டலை விட்டு வெளியேறினர்.
மளமளவென பரவிய தீயினால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த திருச்சி தீயணைப்புத் துறையை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து, தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்தனர். 4வது மாடியில், அக்கவுண்ட்ஸ் தொடர்பான ஆவணங்கள் உள்ள பகுதி என்று கூறப்படுகிறது.

தீயால் சேதமான கட்டிடம்
அங்கு ஏராளமான ஆவணங்கள், நோட்டுகள், புத்தகங்கள் இருப்பதால், இரவு, 11 மணி வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஆனாலும், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்தனர். தற்போது வரை, இத்தீவிபத்தினால் உயிர் சேதம் எதுவும் இல்லை.
அதேநேரத்தில், இந்த ஓட்டல் அருகிலேயே பாஸ்போர்ட் அலுவலகம் இருப்பதால், அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாலை, 2 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
செய்தியாளர் : விஜயகோபால் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.