Home /News /tamil-nadu /

30 ஆயிரம் மரக் கன்றுகள், 6 லட்சம் புங்கன் விதைகள்.. சிறைக்குள் இருந்து நீளும் பசுமைக்கரம் - ஈழத்தமிழரின் ‘ஈர நெஞ்சம்’

30 ஆயிரம் மரக் கன்றுகள், 6 லட்சம் புங்கன் விதைகள்.. சிறைக்குள் இருந்து நீளும் பசுமைக்கரம் - ஈழத்தமிழரின் ‘ஈர நெஞ்சம்’

மகேந்திரன்

மகேந்திரன்

இலங்கை தமிழரான மகேந்திரன் அவருடைய சொந்த முயற்சியினால் இதுவரை, 30 ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்கியும், 6 லட்சம் புங்கன் விதைகளையும் சேகரித்தும் உள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணம் குடாநாட்டை சேர்ந்தவர் மகேந்திரன் (48). இலங்கையில் இனப் படுகொலைப் போர் உச்சத்தில் இருந்த, 1990ஆம் ஆண்டில், தனது தாய், தந்தையுடன் அகதியாக தமிழகம் வந்தார். வேலூர், சென்னை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு அகதிகள் முகாமில் வசித்தார். திருமணமான பிறகு, துணி விற்பது போன்ற கிடைத்த வேலைகளை செய்து வந்தார்.

பாய்ந்த வழக்குகள்

கடந்த, 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து ஆஸ்திரேலியா தப்பிக்க முயன்றதாக, மகேந்திரன் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. இதனால், நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைத்த, 15 நாட்களில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் இருந்து நியூசிலாந்து தப்ப முயன்றதாக மற்றதொரு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. தற்போது மகேந்திரன், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, 8 ஆண்டுகள் போராடி, அவர் மீதான இரு வழக்குகளையும் எதிர்கொண்டு விடுதலையாகியுள்ளார். ஆனால், நிரபராதி என்று தீர்ப்பாகி, 5 மாதங்களான நிலையில், சிறைக் கொட்டடி வாழ்க்கை மகேந்திரனை இன்றும் துரத்துகிறது.

சொந்த சோகம்

கொடும் தண்டனையால் தனது இளமைக் காலத்தை தொலைத்த மகேந்திரன், சிறைக்கு வந்த பிறகு தனது குடும்பத்தையும் தொலைத்திருக்கிறார். கடந்த, 2010ம் ஆண்டு இலங்கை திரும்பியதாக கூறப்படும், இவரது மனைவி, குழந்தைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதே அவருக்கு தெரியவில்லை. வயோதிகத்துடன், வயதும் முதிர்ந்த நிலையில், அவரின் தாயும், தந்தையும் பாலாறு அணைக்கட்டு அகதிகள் முகாமில் ஆதரவற்று  வாழ்கின்றனர்.

பசுமைக்கரம்

இளம் வயதில் இருந்தே தோட்ட வேலைகள் செய்வதில் ஆர்வம் கொண்ட மகேந்திரன், இயற்கையை பெரிதும் நேசிக்கும் குணம் கொண்டவர். காலச்சூழல் தன்னை சிறையில் அடைத்தாலும், மண் மூடிய விதைக்குள் முளைக்கும் விருட்சம் போல, மரக் கன்றுகளை வளர்ப்பதில் பேரார்வம் காட்டினார்.

முழுக்க முழுக்க அவருடைய சொந்த முயற்சியினால் இதுவரை, 30 ஆயிரம் மரக்கன்றுகளை உருவாக்கியும், 6 லட்சம் புங்கன் விதைகளையும் சேகரித்தும் உள்ளார். இவை அனைத்தையும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, 'தண்ணீர்' போன்ற தன்னார்வ அமைப்புகளிடம் இலவசமாக வழங்கியுள்ளார்.

Must Read : 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் உயர்வு..!

“தனது வாழ்நாளில், உலகம் முழுவமும், 2 கோடி மரக்கன்றுகளை நடுவதே இலக்கு” என்று கூறும் மகேந்திரன், “எனது வழக்குகளில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பின்னரும் என்னை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? எனது பசுமைப் பணி தொடரவாவது, கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் என்னை விடுதலைச் செய்ய வேண்டும்” என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றார்.

Read More : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு

எட்டாண்டு சிறை, உறவுகளை பிரிந்த கொடுமை மகேந்திரன் கண்களில் இருந்து கண்ணீர் தாரை, தாரையாக பெருகிறது. அப்போதும், அவரது கண்ணீர் துளிகள்பட்டு காலடியில் இருக்கும் பூச்செடி ஒன்று சிரித்தபடி துளிர்க்கிறது.
Published by:Suresh V
First published:

Tags: Tree planted, Trichy

அடுத்த செய்தி