திருச்சி தேவதானத்தை சேர்ந்தவர் சந்துரு (43). லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமார், சந்துருவின் தங்கை விஜயலட்சுமியை காதலித்து, கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தார்.
கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி இறந்துவிட, அவரது மகளும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், மைத்துனர் முறை கொண்ட சிவக்குமார், தங்கை முறை கொண்ட சந்துருவின் மனைவி சத்யாவுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார். சந்துரு இதைக் கண்டித்ததால், சத்யா, தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது சிவக்குமாருடன் குடும்பம் நடத்தி வருகிறாராம்.
இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, இன்று காலை, 9.30 மணி பெரிய அரிவாளை கையோடு எடுத்து வந்தார். திருவானைக்காவல் ரயில்வே மேம்பாலத்தில் சிவக்குமாரை ஓட.. ஓட.., விரட்டி.. விரட்டி வெட்டியுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தனிப்பிரிவு ஏட்டு ராஜாமணி, சந்துருவை அரிவாளுடன் மடக்கி பிடித்தார். படுகாயமடைந்த சிவக்குமாரை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சேர்த்தார்.
Must Read : முகக்கவசம் கட்டாயம்.. மீறினால் அபராதம் வசூலிக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம், வாகன ஓட்டிகளை பதைபதைக்க வைத்தது. சமயோசிதமாக செயல்பட்டு, ஒரு கொலையை தடுத்த, தனிப்பிரிவு ஏட்டு ராஜாமணியை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.