திருச்சி, ஏப்.11-கடந்த மார்ச், 21ம் தேதி ராகு- கேது பெயர்ச்சி அன்று, வி.கே. சசிகலா தனது முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை தஞ்சையில் துவங்கி, திருச்சியில் முடித்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லுமா? என்பது குறித்த தீர்ப்பு, இன்று வெளியாகிறது. பரபரப்பான இந்த சூழலில், தனது, 2ம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை சசிகலா இன்று திருச்சியில் துவங்கினார். சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம், திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சசிகலா, அங்கிருந்து காரில் கிளம்பினார்.
முதலில், சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும், சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து, திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்து வருகிறார்.
முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் செல்கிறார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்கிறார். சங்ககிரி வழியாக சேலம் மாவட்டம் எடப்பாடி செல்லும் சசிகலா, அங்குள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்கிறார். இறுதியாக, சேலம் ராஜகணபதி கோயிலில் தரிசனம் செய்வதுடன், தனது, 2ம் கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.
ALSO READ | Rama Navami | ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ ராம நவமி விழா (படங்கள்)
திருச்சியில் சசிகலாவை வரவேற்கும் விதமாக, அவரது ஆதரவாளர்கள் வழி நெடுக அதிமுக கொடிகளை ஊன்றியிருந்தனர். மேலும் ஆங்காங்கே "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வருக வருக.." என்று ப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். குறிப்பாக, உத்தமர் கோயிலில் இருந்து சசிகலா வெளியே வந்தபோது, அங்கிருந்த பெண்கள், "அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வாழ்க.." என்று கோஷங்களை எழுப்பினர்.
செய்தியாளர் : விஜயகோபால் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.