திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், நொச்சியம் பகுதியில் உள்ள அத்தாணி என்ற இடத்தில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் துறையூர் நோக்கி சென்ற கொண்டிருந்த முருகானந்தம் என்பவரிடம் வாலிபர் ஒருவர் சாலை ஓரத்தில் நின்று லிப்டு கேட்டுள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள் முருகானந்தத்தை வழிமறித்து அவரிடம் கத்திமுனையில் செல்போன், பணம் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து முருகானந்தம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் வாலிபர் முருகானந்தத்திடம் இருந்து கத்திமுனையில் பறிக்கப்பட்ட ஏடிஎம் கார்ட் மூலம் அந்தப் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் 13 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் ஏடிஎம் மிஷின் அறையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில். நொச்சியம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன் வயது 21, அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சக்கரவர்த்தி வயது 21 மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் நந்தா என்கிற நந்தகுமார் ஆகிய 3 நண்பர்களை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்
செய்தியாளர் : இ.கதிரவன், திருச்சி இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.