• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சோழ மன்னர்கள், கிருபானந்த வாரியார் திருப்பணிகள் செய்த வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

சோழ மன்னர்கள், கிருபானந்த வாரியார் திருப்பணிகள் செய்த வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

வயலூர் முருகன் கோயில்

வயலூர் முருகன் கோயில்

சோழ மன்னர்கள் தொடங்கி வாரியார் வரை திருப்பணிகள் செய்த வயலூர் முருகன் கோயில்...***கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை...

  • Share this:
சோழ மன்னர்கள் தொடங்கி கிருபானந்த வாரியார் வரை திருப்பணிகள் செய்த சிறப்பு பெற்ற திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே வயலூர் முருகன் கோயில் வரலாற்று, தொன்மை, ஆன்மீக சிறப்பு பெற்றது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம். அவருக்கு ‘அத்தித் திரு...’ என அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட தலம் வயலூர் என்கிறார்கள்.

வயலூர் முருகன் கோயில் என்று பக்தர்களால், அழைக்கப்பட்டாலும் சிவ பெருமானை முருகன், அக்னி பகவான், அகத்தியர் உள்ளிட்டோர் வணங்கிய ஆதிநாதர் கோயில் வயலூர். பக்தர்கள் கேட்பதைத் தட்டாமல் தருவதால் மறப்பிலி நாதர், அக்னி பகவான் வணங்கியதால் அக்னீஸ்வரன், விடங்கப் பெருமான், திருமகாதேவன், திருக்கற்றளிப் பெருமான் என்றும் சிவ பெருமான் அழைக்கப்படுகிறார்.

ஆதிநாதரை வள்ளி, தெய்வானையுடன் வணங்கும் முருகப் பெருமான். ஆதிநாயகி, முருகப் பெருமான் உருவாக்கிய சக்தி தீர்த்தம், பொய்யாக் கணபதி, நவக்கிரகங்களில் தேவியருடன் காட்சியளிக்கும் சூரிய பகவான் உள்ளிட்ட  பல்வேறு சிறப்புகள் பெற்ற திருத்தலம் வயலூர் என்கிறார் குருக்கள் கார்த்திகேயன்.

சோழ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில் அருணகிரிநாதர் அருள் பெற்ற தலம். திருமுருக கிருபானந்த வாரியாரால்  திருப்பணிகள் நடைபெற்றது. நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றி, நிதி திரட்டி, வயலூர் கோயில் கோபுரம் உள்ளிட்ட திருப்பணிகளை மேற்கொண்டார் வாரியார் சுவாமிகள். அதை நினைவு கூறும் வகையில் வாரியார் உருவப் படம் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்தத் திருக்கோயிலில் கடந்த 2006ஆம் ஆண்டு குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், 2006க்குப் பிறகு 15 ஆண்டுகளாகியும் கும்பாபிசேகம் நடைபெறவில்லை.

மேலும், கோயில்  வன்னி மரத்தடி மண்டபம், சுற்றுச் சுவர்கள் உள்ளிட்டவையும் விரிசல் விட்டும், சிதைந்தும் உள்ளன. எனவே கோயில் சீரமைப்பிற்கான திருப்பணிகளைத் தொடங்கி, கும்பாபிஷேகத்தை உடனே நடத்த வேண்டும் என்றும் பக்தர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Must Read : பிரமோற்சவத்திற்கு தயாராகும் திருப்பதி (படங்கள்)

பிள்ளைப்பேறு, திருமணத் தடை நீக்கம் உள்ளிட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்றும் தலம் என்கிறார்கள். கேட்டது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்கிறார்கள் வயலூர் முருகனை வழிபடும் பக்தர்கள். சிறப்பு பெற்ற இத்தலத்தில் திருப்பணிகள், கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டும் என்று அரசிடம் கேட்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: