ராமஜெயம் கொலை வழக்கு குறித்து பொதுமக்களிடம் தகவல் திரட்டும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழு ஈடுபட்டு வருகிறது. மேலும், தகவல் செல்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, 4 மாதங்களாக, தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அதையடுத்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையிலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து, கடந்த, 2017ம் ஆண்டு, ராமஜெயத்தின் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் காரணமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும் படிக்க: பிறந்த குழந்தையை சாக்கடையில் வீசி சென்ற பெண்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
தொடர்ந்து, 4 ஆண்டுகள் சிபிஐ விசாரித்தும் வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், 'இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவானது, ஏற்கனவே பல்வேறு குழுவினர் விசாரித்து வைத்துள்ள ஆவணங்களின் மீதான மேல் விசாரணையை துவக்கியது. அடுத்த அதிரடியாக, திருச்சியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர், வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழுவானது பொதுமக்களிடம் தகவல் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்தால், பொதுமக்கள் கீழ்கண்ட ஈ.மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரியப்படுத்தவும்.
rmathan1970@gmail.com
Sit காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
9080616241
Dsp மதன்
9498120467, 7094012599
தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.