ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் பழுது: பணிகள் நிறுத்தம்.. சுதாரித்த திருச்சி அரசு மருத்துவமனை!

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

உற்பத்தி இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  இதையடுத்து இன்று அதிகாலை முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி - தஞ்சாவூர் சாலை புதுக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தினமும் 50 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், உற்பத்தி இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டதால் ஆக்சிஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.  இதையடுத்து இன்று அதிகாலை முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக பழுதை சரிபார்க்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். எனினும், 15 மணி நேரத்தைக் கடந்தும் பழுது நீக்கப்பட்டு, உற்பத்தி தொடங்கப்படவில்லை.

இதனால், இன்று ஒரு நாள் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் பழுது சரிபார்க்கப்படும். நாளை முதல் வழக்கம் போல் விநியோகம் தொடங்கி விடும் என்று ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுதாரித்த அரசு மருத்துவமனை

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையில் ஏற்பட்ட பழுதால், விநியோகம் தடைபட்டதை அறிந்து திருச்சி அரசு பொது மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் துரிதமாக செயல்பட்டு மாற்று ஏற்பாடு செய்துள்ளனர்.

உடனடியாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தை தொடர்பு கொண்டு, ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேவைக்கு மேல் கையிருப்பு உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் 353 பேருக்கு தினமும் 4- 5 டன் ஆக்சிஜன் தேவை என்கிற நிலையில், தற்போது 8 டன்னிற்கு மேல் கையிருப்பு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஓரிரு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: