தேர்வில் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை போக்கும் வகையில், மாணவர்களிடையே இந்திய பிரதமர்
மோடி வரும், ஏப்.1ம் தேதி உரையாற்றவிருக்கிறார்.
திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வரும், 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான நவல்கிஷோர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும், விவாதிப்பதற்காகவும், 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற பெயரில், கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
தேர்வுகள் அளிக்கும் அழுத்தம், அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படுகின்றன. கடந்த, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் டெல்லியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான 'பரிக்ஷா பே சர்ச்சா' கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த, 2021ம் ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிலையில், 5வது ஆண்டாக வரும், ஏப்.1ம் தேதி, டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.
ALSO READ | பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்த வீடியோ வைரல்... தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்
'கொரானா நோய் தொற்றிலிருந்து தற்போது முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் இருந்து, ஆப்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த சூழலில், மாணவர்களை மன அழுத்தமின்றி தேர்வுகள் எழுத வைப்பதற்காகவும், மன அழுத்தமற்ற தேர்வுமுறையை, பொது இயக்கமாக மாற்றவும், பிரதமரின் இந்த கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
எனவே, பிரதமர் மோடியுடனான இந்த கலந்துரையாடல் நிகழ்வில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் காணொலி வழியாக இணைய உள்ளனர். இதுதவிர, பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்வை, தூர்தர்ஷன், ராஜ்யசபா டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள், அகில இந்திய வானொலி மற்றும் மத்திய அரசு, பிரதமர் அலுவலகம் சார்ந்த பல்வேறு யூடியூப் தொலைக்காட்சிகள் வழியாக நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | ‘போலீஸ் உங்க கையிலதானே இருக்கு .. முடிஞ்சா கைது செய்யுங்க’: அண்ணாமலை சவால்
திருச்சியிலுள்ள, 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் பிரதமரின் இந்நிகழ்வை மாணவர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க அதிகளவிலான பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். முதல் வகுப்புக்கு, 40 மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், கடந்தாண்டு, 900க்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்தன. நடப்பாண்டுக்கு ஆன்லைன் மூலம் அதிகளவிலான விண்ணப்பங்கள் தற்போது வந்து கொண்டுள்ளன. மன அழுத்தமின்றி தேர்வினை எதிர்க்கொள்ள, பிரதமரின் பேச்சு அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
ALSO READ | EXCLUSIVE: திராவிடக் கருத்தியல் என்று ஒன்று இல்லை.. திமுகவுக்கு மாற்று பாஜகதான்... அண்ணாமலை பிரத்யேக பேட்டி
இப்பள்ளிக்கு, புதிய கட்டிடம் கட்ட ஜெயில் கார்னர் - பொன்மலைப்பட்டி சாலையை ஒட்டி, சுமார், 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய பொதுப் பணித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.