பெயரை மாற்றியாவது தாலிக்கு தங்கம் கொடுங்கள் என்று தமிழக அரசிற்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்துக் கொள்வதற்காக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை பாதிக்கும். இது எந்த விதத்திலும் நியாயமில்லை. கொரோனா காலகட்டத்தில் பலர் வேலையிழந்து உள்ள நிலையில், அனைத்து விலைவாசியும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேஸ் விலை உயர்வு, மக்களை அதிகமாக பாதிக்கும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். அரசு, சுமைகளை மக்கள் மீது சுமத்த கூடாது. மக்களுக்காகத்தான் அரசு உள்ளது.
பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ஆகிய திட்டங்கள் மீண்டும் தொடர வேண்டும். பெண்களுக்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி வைக்கக்கூடாது. அம்மா உணவகத்தை, கலைஞர் உணவகம் என்று மாற்றியதை போல, ஆளுங்கட்சிக்கு ஏற்றமாதிரி திட்டத்தின் பெயரை மாற்றியாவது இத்திட்டத்தைத் தொடரலாம்" என்று தெரிவித்தார்.
Also read... மினி கிளினிக் பணியை நம்பி காதல் திருமணம்.. 6 மாத கர்ப்பிணி வேலை இழக்கும் அபாயம்
திமுக, அதிமுக அடுத்தபடியாக தேமுதிக என்று இருந்த நிலையில் தற்போது அந்த கட்சி தோல்வி அடைந்துள்ளதே" என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் "எல்லாக் கட்சியும் அப்படித்தான். வெற்றியும் தோல்வியும் சகஜம். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி, தற்பொழுது ஆட்சியில் உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சி, தற்போது ஆட்சி இல்லாமல் இருக்கிறது. அரசியலில் இதெல்லாம் சகஜம். எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம்" என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.