• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரவுடிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை

ரவுடிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க காவல்துறை அதிரடி நடவடிக்கை

காவல்துறை நடத்திய கூட்டம்

காவல்துறை நடத்திய கூட்டம்

ரவுடிகளிடம் ஆயுதங்கள் இருப்பதை கண்டறிவது மற்றும் ரவுடிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை ஆவதை தடுக்க நடவடிக்கை.

  • Share this:
திருச்சி மாநகர், புறநகர்ப் பகுதிகளில் ரவுடிகளுக்கு ஆயுதம் விற்பதைத் தடுக்கும் வகையில் அரிவாள், கத்தி தயாரிக்கும் பட்டறைகளுக்கு வழிகாட்டுதல்களை காவல் துறை அறிவித்துள்ளது.

சட்டம் ஒழுங்கை கண்காணித்து கட்டுக்குள் வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும்  2,500க்கும் மேற்பட்ட ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் மாவட்டத்தில் இதுவரை, 250க்கும் மேற்பட்டவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் வாகன சோதனை, திடீர் கைதுகள் நடைபெற்றும் வருகின்றன.

இந்நிலையில், ரவுடிகளுக்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைப்பதை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர். குறிப்பாக, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திருச்சி மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கவும், எவரேனும் ஆயுதங்களுடனோ அல்லது, கூட்டாகவோ அல்லது ஏதேனும் அசம்பாவிதம் செய்யும் நோக்கோடு  சென்றாலோ பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல்  தெரிவிக்க வேண்டும்.

மேலும், ரவுடிகளிடம்  ஆயுதங்கள் இருப்பதை கண்டறிவது மற்றும் ரவுடிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை ஆவதை தடுப்பதற்காக கொல்லன் பட்டறைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இதன்படி, திருச்சி மாநகர, மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில், புதிதாக ஆயுதங்கள் வாங்கும் நபர்கள் மற்றும் பழைய ஆயுதங்களை புதுப்பிக்க வரும் நபர்கள் குறித்த விபரங்களை ஒரு பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அந்த பதிவேட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும், ஆயுதங்கள் தயாரிக்கும் அனைத்து பட்டறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்த தகவல்களை அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள், பட்டறை உரிமையாளர்களுடன் காவல் அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடத்தி, அறிவுறுத்தியுள்ளனர். ஆயுதப் புழக்கத்தை தடுக்கும் வகையில் காவல் துறையின் இந்த கெடுபிடிகள் குற்றப்பின்னணி உடையோருக்கும் ரவுடிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Must Read : ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை

அதே நேரத்தில் காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: