தமிழகத்தில் முன்மாதிரியாக திகழும் திருச்சி அரசு பொது மருத்துவமனை... ராட்சத கொள்கலனில் ஆக்ஸிஜன் கையிருப்பு...

தமிழகத்தில் முன்மாதிரியாக திகழும் திருச்சி அரசு பொது மருத்துவமனை... ராட்சத கொள்கலனில் ஆக்ஸிஜன் கையிருப்பு...

ஆக்சிஜன்

கொரானா தொற்று 2வது அலையில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 20000க்கும் அதிகமாகவும் உயிரிழப்பு 200க்கும் மேலும் அதிகரித்துள்ளது.

  • Share this:
திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கொரோனா சிறப்பு பிரிவில் 450 ஆக இருந்த படுக்கை வசதி, தற்போது 684ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த படுக்கைகளில் 60% படுக்கைகள் செயற்கை சுவாசக் கருவிகளுடன் உள்ளன. இவை மட்டுமின்றி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி வளாகம், திருச்சி தனியார் கல்லூரி ஒன்று என கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரண சிகிச்சை  தற்காப்பு மற்றும் தனிமைப்படுத்தல் தேவைப்படுவோர் மற்ற சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்படுகின்றனர். நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது.

குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நோயாளிகளுக்கு படுக்கை வசதி கூட இல்லாமல் அவதிப்படும் நிலையையும் காண முடிகிறது. ஆனால், பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் நிலை ஆறுதலாக உள்ளது. அந்தளவிற்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதற்கு மற்றுமொரு உதாரணமாக திருச்சி  அரசு பொது மருத்துவமனை உள்ளது.

இங்கு கொரோனா சிகிச்சைக்கு மட்டும் தனியாக 684 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 354 படுக்கைகள் செயற்கை சுவாசக் கருவிகளுடன் உள்ளன. தற்போது 200 - 220 பேர் செயற்கை சுவாசம் பெறுகின்றனர். இவை தவிர பொது தீவிர சிகிச்சை பிரிவில் 60 பேருக்கும் செயற்கை சுவாசம் பயன்படுகிறது. அனைத்து சிகிச்சை பிரிவுகளிலும் மொத்தமாக 1000கும் மேற்பட்டோருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் உள்கட்டமைப்பு உள்ளது.

இதற்கேற்ப கடந்த ஆண்டே திட்டமிட்டு 20 டன் (20 கிலோ லிட்டர்) கொள்ளவு கொண்ட ராட்சத கொள்கலன் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் உள்ளது என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா. இது தவிர ஒரு டன் கொள்ளளவு கொண்ட மற்றொரு கொள்கலனும் உள்ளது.

இவற்றிலிருந்து தற்போது 3 டன் வரை தினசரி பயன்பாடு உள்ளது. எனவே தினசரி தேவைக்கு மேல் பல மடங்கு ஆக்ஸிஜன் திருச்சி அரசு பொது மருத்துவமனையில்  கையிருப்பில் உள்ளது. தேவைப்படும் போது தனியார் நிறுவனத்திடமிருந்து  உடனடியாக  ஆக்ஸிஜன் நிரப்பப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் தனியார் மருத்துவமனை கூடுதலாக உள்ளது. தேவைக்கு ஏற்ப சிகிச்சை வசதிகளை அதிகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறுகிறார்.

மேலும் படிக்க... Lockdown | ஊரடங்கால் திருவள்ளூரில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்த 5 பேர் கைது

பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு போதிய செயற்கை சுவாசக் கருவி வசதியில்லாத நிலையில், இறுதி கட்டத்தில் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு வருகின்றனர். செயற்கை சுவாசக் கருவி வசதி, ஆக்ஸிஜன் கையிருப்பு, மருத்துவர்கள், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும் பொது மக்கள் அனைவருக்கும் விழிப்பும் பொறுப்பும் வேண்டும். தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல. தேவையின்றி நடமாடுவதைத் தவிர்த்து, கொரோனா தொற்றில்லா நிலைக்கு வர  ஒத்துழைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: