Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் - பிரச்சாரத்தில் ஓ.பன்னீர் செல்வம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் - பிரச்சாரத்தில் ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

  திருச்சி மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, ஆதரித்து பிரச்சாரம் செய்யும் கூட்டம், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர். காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி, சிவபதி, கு.ப.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  கூட்டத்தில், பேசிய ஓ. பன்னீர்செல்வம், ‘அதிமுக வீறுகொண்டு எழுந்து, பொய்யான வாக்குறுதி கொடுத்து, 10 மாதமாக ஆட்சி செய்யும், அராஜக திமுக ஆட்சியை அகற்றும் வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. தமிழக வரலாற்றில், 30 ஆண்டுக் காலம் ஆட்சியில் இருந்த கட்சியாக அதிமுக விளங்குகிறது. எம்ஜிஆர் காலத்தில், 18 லட்சம் உறுப்பினர்கள் இருந்த நிலையில், ஒன்றரை கோடி உறுப்பினர்களை இணைத்து, கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினார்.

  காவிரி சாதனை

  சட்டமன்றத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டது சிறு சறுக்கல். பொய்யான வாக்குறுதிகள் காரணமாக திமுக, சிறிய சதவீதம் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தது. தஞ்சை தரணியில், விவசாயிகள் சேற்றில் கை வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். கர்நாடக- தமிழக காவிரி பிரச்னைக்கு முடிவாக, உச்ச நீதிமன்றத்தை அணுகி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு அரசாணை வெளியிட செய்தவர் ஜெயலலிதா.

  அவருக்கு பிறகு, காவிரி நதிநீர் ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவை அமைத்து தந்த பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேரும். தஞ்சையை சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மத்திய, மாநில அரசில் அதிகாரத்தில் இருந்தாலும் காவிரி உரிமைக்காக எதுவும் செய்யாதவர்கள் திமுகவினர்.

  பொதுமக்கள், கொரோனாவால் இருந்தால் என்ன? செத்தால் என்ன? என்பதை போல இருக்கிறது திமுக ஆட்சி. திமுக ஆட்சி, காட்சியாக இருக்கிறது. ஆட்சி பதவியேற்று, 10 மாதங்களாகியும் எவ்வித நலத்திட்டமும் இல்லை. நீட் தேர்வு விலக்காக யாரை சந்தித்து பேச வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதைவிடுத்து நீட் விலக்கு பெற திமுகவால் முடியாது. திமுகவின் பகல் வேஷம் கலைந்து விட்டது.

  நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத் தேர்தல்? 'நடந்தாலும் நடக்குமாம்'.. துரை வைகோ ஆதங்கம்!  சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த திமுக அச்சப்படுகிறது. இந்தியாவில் ஒரு பண்டிகைக்கு, 2,500 ரூபாய் கொடுத்த ஒரே ஆட்சி அதிமுக ஆட்சி. அப்போது, 5,000 கொடுக்கச் சொன்ன ஸ்டாலின், தற்போது பொங்கலுக்கு, 100 ரூபாய் கூட தரவில்லை.


  தொண்டர் தேர்தல்

  பகட்டான, விளம்பர அரசியல் செய்து, பொய்கள் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவினரின் முகத்திரை கிழிக்க நல்ல வாய்ப்பு இந்த தேர்தல் நமக்கு கிடைத்துள்ளது. கடந்த முறை, உள்ளாட்சியில், ஒரு லட்சம் பேருக்கும், கூட்டுறவில், 2 லட்சம் பேருக்கும் பதவி வாங்கி கொடுத்தவர் ஜெயலலிதா. நாங்கள் ஜெயலலிதா பெயரை சொல்லி வெற்றிப் பெற்றோம்.

  இந்த தேர்தல், தொண்டர்களின் தேர்தல். அதிமுக தொண்டர்கள் இயக்கம். தலைவர்கள் பிரிந்திருந்தாலும் தொண்டர்கள் ஒன்றாக நின்று காக்கும் இயக்கம் அதிமுக.

  விரைவில் தேர்தல்?

  இந்த தேர்தல், நூற்றுக்கு நூறு அதிமுக வெற்றிப் பெறும் தேர்தல். இதன் மூலம் திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும். வரும் இரண்டாண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்போது, நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடக்கும். அதற்கான அச்சாரமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இருக்கும்" என்றார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Local Body Election 2022, O Panneerselvam

  அடுத்த செய்தி