முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இரவு நேர ஊரடங்கு: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகள்

இரவு நேர ஊரடங்கு: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பயணிகள்

அரசின் நெறிமுறைகளை பின்பற்றி காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இரவு ஊரடங்கு நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை  தமிழகத்தில் அமலானது. இதனால் வெளியூரில் இருந்து வந்த பயணிகள் இரவு முழுவதும் திருச்சி பேருந்து நிலையத்திலேயே பேருந்து வசதி இல்லாமல் காத்திருந்தனர். அதேபோன்று மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டம் இருக்க கூடாது என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 4.00 மணிக்கு  முடிவடைந்த நிலையில் திருச்சி பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பேருந்து இயங்கியவுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் பெரும்பாலான பேருந்துகள் கூட்டம் இல்லாமல் குறைவான பயணிகளோடு சென்றன.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு மதியம் 3 மணிக்கு, விழுப்புரத்திற்கு 6.30 மணிக்கு, சேலத்திற்கு 5.30 மணிக்கு, முசிறி நாமக்கல்லுக்கு இரவு 8 மணிக்கு, கோவை 5 மணிக்கும், திருப்பூருக்கு 6 மணிக்கு, கரூர் 7.30 மணிக்கு, பழனிக்கு 6.30 மணிக்கு, திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி வரைக்கும், மதுரைக்கு 7 மணி வரைக்கும், வேளாங்கண்ணிக்கு 5.30 மணிக்கு கடைசி பேருந்தாக இயக்கப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு எதிரொலியால் குறைவான பயணிகளே பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சிராப்பள்ளி மாநகர காவல் பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி மேற்கண்ட அரசாணையை அமல்படுத்த திருச்சி மாநகரில் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் தலைமையில் அனைத்து காவல் நிலையங்களிலும் மொத்தம் 24 இடங்களில் 1 காவல் உதவி ஆணையர் 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க... கொரோனா தடுப்பூசி இல்லை என கூறிய சுகாதாரத்துறை அதிகாரிகள்... ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இரவு நேர ஊரடங்கு சிறப்பு வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கiயில் ஈடுப்படுத்தப்பட உள்ளது. அரசு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.  எனவே பொதுமக்கள் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு  மாநகர காவல் ஆணையர் அருண் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளார்: கதிரவன், திருச்சி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Night Curfew, Trichy