குடியரசுத் தலைவர் பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டதாக முத்தரையர் கூட்டு நடவடிக்கைக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் அதிரடியாக புறக்கணித்தனர். இந்நிலையில் குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அனுப்பிய பரிந்துரை கடிதத்தை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இன்று திருச்சி பிரஸ் கிளப்பில், முத்தரையர் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதை தடுக்க நாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
நாங்கள் வன்னியருக்கு எதிரானவர்கள் இல்லை. இட ஒதுக்கீடு கொடுத்தால், 139 பிற்படுத்தப்பட்ட, 47 மிகவும் பிற்படுத்தப்பட்ட, 68 சீர் மரபினருக்கும் சேர்த்துக் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம்.
தேசிய சீர்மரபினர் ஆணையங்களின் பரிந்துரைப்படி, முத்துராஜா, முத்திரியர், முத்தரையர்களை சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வலையர், அம்பலக்காரர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கியும், சீர்மரபினர் பட்டியலில் அவர்களின் மாவட்டப் பெயர்களை நீக்கியும், குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலமாக கடந்த, 6 மாதம் முன்பு தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
Also read... சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி இழுத்துசென்ற லாரி: 2 பேர் உயிரிழப்பு
ஆனால், தற்போது வரை அந்த பரிந்துரை கடிதத்தின் மேல் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இது, முத்தரையர் இன மக்களின் உரிமையை பறிக்கும் செயல். இதற்காக, முதல்வரை சந்திக்க ஓராண்டாக நாங்கள் அனுமதி கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர்" என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.