தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், முதல் பணியாக, சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் விரிவாக்கப்பணிகள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பாக, திருச்சியில் செயல்படுத்தப்பட உள்ள அரிஸ்டோ மேம்பால பணிகள், காவிரிப் பாலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பார்வையிட்டனர். அதன் பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் “தமிழகத்தின் மத்திய மாவட்டமாக திருச்சி அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திருச்சியின் முகம் மாறும், சிறப்பான மாவட்டமாக திருச்சி உருவாகும்.
திருச்சி- துவாக்குடி- பால்பண்ணை சேவைச் சாலைத் திட்ட பணிகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் இந்த சேவை சாலைத்திட்டம் மதிப்பீடு ரூ.48 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது இதன் மதிப்பு ரூ.2,000 கோடி அளவில் உயர்ந்துள்ளது.
உயர்மட்ட பாலம் அமைக்கலாம் என்றால், மத்திய அரசு தான் செய்ய முடியும். சேவைச்சாலை அமைக்கலாம் இவ்வளவு பெரிய தொகை, நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்தும். எனவே, இங்கு உயர்மட்ட பாலமா? சேவைச் சாலையா? என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
'மில்லிங்' பிரச்சனை
தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, பழைய சாலைகளை அப்புறப்படுத்திய பின்னர் தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது. 'மில்லிங்' செய்யாமல் சாலைகள் போடப்பட்டால் எனக்கு புகார் அனுப்பலாம். கண்டிப்பாக மில்லிங் செய்து தான் புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் ஒப்பந்ததாரர்கள் பணம் வாங்குவதாக எனக்கு தகவல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்படுவர்.
Read More : பொதுத் தேர்வின் போது தடையற்ற மின்சாரம் - மின்வாரியம் உத்தரவு
இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். நெடுஞ்சாலைத்துறையில் “Internal audit system” என்ற முறை முதல்வரின் அறிவுறுத்தல் பேரில் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இதன் பின்னர், சிறு தவறு கூட இத்துறையில் நேராது.
மின்துறைக்கு கடிதம்
தமிழக அரசுக்கு நிதிப்பற்றாக்குறை இருப்பது உண்மை தான். ஆனால், நாங்கள் திருச்சிக்கு அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம். செடிகள் வைத்தால் ஆடு, மாடுகள் தொந்தரவு இருக்கும் என்பதால், ஆறு அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் வாங்கி வைத்து வருகிறோம். உயரமான மரக்கன்றுகள் தான் சாலை ஓரங்களில் நடப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை துறை மரங்களை தேவையில்லாமல் வெட்டக்கூடாது என்று மின்துறைக்கு கடிதம் எழுத உள்ளேன்” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஜெயக்குமாருக்கு பதிலடி
“கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?” என்ற கேள்விக்கு, “நெடுஞ்சாலையை தனித் துறையாக்கியவர் கருணாநிதி. மேலும், கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி.
Must Read : நாளை கத்திரி வெயில் தொடக்கம்... 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என அறிவுரை
அதனால் அந்த சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது. அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் இதில் குழப்பம் வரும்” என்று கூறினார்.
கூட்டரங்கில் சிரிப்பலை
இறுதியாக இது குறித்து கருத்து கூற முற்பட்ட அமைச்சர் கே.என்.நேரு, “நான் இதற்கு பதில் சொல்வேன். ஆனால், சென்சாரில் கட் ஆகி விடும்” என்று கூறியதால் கூட்டரங்கில் சிரிப்பலை எழுந்தது.
நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும், காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் பிரசித்திபெற்ற சாலை. அந்த சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்களை விரும்ப மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள் என்று ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.