திருச்சியை தமிழகத்தின், 2வது தலைநகராக்க வேண்டும் என்ற, மறைந்த முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் கனவு, இன்னும் கனவாகவே இருக்கிறது. தலைநகரங்கள் வரிசையில், திருச்சியை குறி வைப்பதற்கு முழு முதற்காரணம் பூகோள ரீதியில் போக்குவரத்திற்கு, தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி இருப்பது தான். சாலை போக்குவரத்தில் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக திகழும் திருச்சி, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்திலும் சிறந்து விளங்குகிறது.
தலைநகரான சென்னை, கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து, அதிகபட்சமாக, 5 மணி நேர பயணத்தில் வந்தடைய முடியும் என்பது திருச்சியின் சிறப்பம்சம். இதுமட்டுமல்லாது, காவிரி கரையோர நகரம் என்பதால், குடிநீருக்கு தட்டுப்பாடு இருக்காது என்பது மற்றொரு காரணம். எனவே தான், ஆண்ட அதிமுகவை விட, ஆளும் திமுக அரசு, திருச்சியை, 2வது தலைநகராக்கும் பணியை மெளனமாகவும், அதேநேரத்தில் தீவிரமாகவும் செய்து வருகிறது.
சென்னையில் ஸ்தம்பித்து வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு, மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையை தொடர்ந்து, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இரண்டாம் நிலை நகரங்களிலும் மெட்ரோ, பறக்கும் ரயில் உள்ளிட்ட அதிவிரைவு போக்குவரத்து ரயில் திட்டத்தை செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.
அதில், முதற்கட்டமாக திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கான, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை, மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் வட்டாரங்கள் கூறியபோது, "திருச்சி உள்ளிட்ட, 2ம் நிலை நகரங்களில், மெட்ரோ, மெட்ரோ லைட், மெட்ரோ நியோ, பிஆர்டிஎஸ் போன்ற அதிவிரைவு போக்குவரத்து திட்டங்களை (மாஸ் டிரான்ஸிட் அமைப்பு) செயல்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
Also Read : விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
அதன்படி, தற்போது திருச்சி மாநகர் தமிழகத்தின், 4வது பெரிய நகரமாகவும், மாவட்டத் தலைநகராகவும் விளங்குகிறது. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகரம், மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மையப் பகுதியாக இருக்கும் திருச்சி மாநகரம், மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், புகழ்பெற்ற மத ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, 27.22 லட்சமாகவும், திருச்சி மாநகராட்சியின் மக்கள் தொகை, 9.16 லட்சமாகவும் உள்ளது. மாநகர மக்கள் தொகை சுமார், 10 லட்சம் என்ற அளவில் இருந்தாலும், மாநகரை ஒட்டியுள்ள முக்கிய பகுதிகள், விரிவாக்கப்பகுதிகளை சேர்த்தால், மக்கள் தொகை தற்போது, 20 லட்சமாக இருக்கும்.
எதிர்கால பொது போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டும், மாநகருக்குள் நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத போக்குவரத்து அமைப்பு கொண்ட நிலையை உருவாக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் திட்டத்தை திருச்சியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read : கோபாலபுரம் குடும்பத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை... அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பிஜிஆர் நிறுவனம் விளக்கம்
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைப்படி, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இப்பணிக்காக, ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, பணி தொடங்கும் நாட்ளில் இருந்து, 4 மாதங்களுக்குள் இந்த ஆய்வுப்பணி முடிக்கப்பட்டு அறிக்கை அளிக்க வேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்கின்றனர்.
திருச்சி மாநகரத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ள விஷயம், மாநகர மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.