முக்கனிகளான மா, பலா, வாழை கனிகளில், உலகளவில் வாழை பயிரிடப்படும் பரப்பளவு மற்றும் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும், மொத்தம், 4,90,700 ஹெக்டர் பரப்பளவில், 168,13,500 மில்லியன் டன்கள் வாழைப்பழங்கள் ஆண்டிற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவிலான உற்பத்தியில் இது, 17 சதவீதம். தமிழ்நாட்டை பொறுத்தவரை வாழை சாகுபடியில் திருச்சி மாவட்டம் பிரதான இடத்தை பெற்றுள்ளது.
பணப்பயிர் என்று கூறப்படும் வாழைகள் உற்பத்தி இங்கு ஆண்டு முழுவதும், பகுதிவாரியாக தொடர்ந்து செய்யப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில், தொட்டியம், காட்டுப்புத்தூர், முசிறி, ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில், 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகின்றன.
ஓராண்டுப் பயிரான வாழையை, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெய்யும் பருவம் தவறிய மழை, அதனுடன் வீசும் திடீர் காற்று காரணமாக, குலை தள்ளிய வாழைகள் நிலை குலைந்து, முறிந்து விழுவது வழக்கமான ஒன்றாகி உள்ளது.
ALSO READ | ஆசிரியர்கள் EL விடுப்பை இனி பணமாக்க முடியாது... பள்ளிக்கல்வி துறை உத்தரவு
இந்த சூறைக்காற்றுக்கு 'சித்திரை சுழி' என்கின்றனர். இதன் காரணமாக, நடப்பு சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கம் தாலுகாவில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, 200 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. தொடர்ந்து, லால்குடி அருகே, பம்பரம் சுத்தி, வளவனூர், வாளாடி, எசனைக்கோரை, நகர் ஆகிய பகுதிகளில், 400 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த, 100 ஏக்கர் வாழைகள் முறிந்து விழுந்தன. இதேபோல, துறையூர் அருகே உப்பிலியாபுரத்தில், 25 ஏக்கர் பரப்பளவில் வாழைகள் முறிந்து விழுந்தன.
இதுகுறித்து, லால்குடி எசனைக்கோரையை சேர்ந்த ராஜபாண்டி கூறியபோது, "நான் டிப்ளமோ படித்து விட்டு வாழை விவசாயம் செய்து வருகிறேன். 3 ஏக்கரில் பயிரிட்ட வாழைகளில், 1,200 வாழைகளை 'சித்திரை சுழி' முறித்துப் போட்டு விட்டது. இன்னும், 2 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் வாழைகள் முறிந்து விழுந்ததால் எனக்கு, 5 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கடன் வாங்கிய பணத்திற்கு வட்டியை எப்படி கட்டுவேன் என்று தெரியவில்லை. தமிழக அரசு, எனது முறிந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்னைப் போன்ற படித்த இளைஞர்கள் தொடர்ந்து விவசாயம் செய்ய உதவிட வேண்டும்" என்றார்.
ALSO READ | பள்ளிக்கு அருகில் மதுபான கடை - மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு
மேலும், இதே பகுதியை சேர்ந்த விவசாயி நந்தகுமார் கூறியபோது, "வாழைப்பயிர் காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்ய, ஒரு ஏக்கருக்கு, 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் வரை செலவாகிறது. அப்படி காப்பீடு செய்தாலும், 'சித்திரை சுழி' தாக்கிய பகுதியில், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், எத்தனை கி.மீ., வேகத்தில் காற்று வீசியது? என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருந்து சான்றிதழ் வாங்கி வரச் சொல்கின்றனர். ஐந்தாவது கூட படிக்காத நான் எப்படி சென்னைக்கு சென்று சான்றிதழ் வாங்கி தருவது? அதனால் தான் 'ஆண்டவன் விட்ட வழி' என்று நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கிறேன். தமிழக அரசு தானாக முன் வந்து வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க உதவிட வேண்டும்" என்றார்.
இதுகுறித்து பாரதிய கிஸான் சங்க மாநிலச் செயலாளர் வீர சேகரன் கூறியபோது, "'சித்திரை சுழி' என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ள வாழைகளை மட்டுமே பாதிக்கின்ற சூறைக்காற்றாக இருக்கிறது. காப்பீடு செய்தாலும் கூட, இதனால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு சொற்ப தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த தொகையை வைத்து கொண்டு, விழுந்த வாழைகளை வயலில் இருந்து வெட்டி அகற்றக்கூட முடியாது. எனவே, 'சித்திரை சுழி'யால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தமிழக அரசு தனிப்பட்ட முறையில், சிறப்பு நிவாரண உதவி வழங்கிட முன் வர வேண்டும்.
ALSO READ | கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ பணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
'சித்திரை சுழி'யால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், நவீன தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகளை வாழை விவசாயிகளுக்கு வழங்க, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன் வர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.