திருச்சி மாநகராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல், வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருப்பதாக தெரிகிறது. மொத்தமுள்ள, 65 வார்டுகளில், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு பங்கீடு செய்வதற்கான கூட்டம், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த வார்டுகள் ஒதுக்குவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒதுக்கீடு 'ஓவர்'
கூட்டத்தில், அமைச்சர் கே.என். நேரு பேசியபோது, "திருச்சி மாவட்டம் திமுக கோட்டை என்று சட்டமன்ற தேர்தலில் நிரூபித்து உள்ளோம். அதற்கு, தோழமைக் கட்சிகளான உங்களது ஒத்துழைப்பும் முக்கிய காரணம். வருகின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று எங்களது கட்சித் தலைமை விரும்புகிறது. அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களுக்கு வழங்கும் சீட்டுகளின் எண்ணிக்கை, இடங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழலாம். அதெல்லாம் புறந்தள்ளி, நமது வெற்றிக்கு முழுமையாக பாடுபட வேண்டும். உங்களுக்கும், எங்களுக்குமான உறவு, சீட் ஒதுக்கீடு உடன் முடிந்து போவதில்லை. வேறு எந்த வகையில் எல்லாம் உங்களுக்கு உதவ முடியுமா அவற்றையெல்லாம் நான் உறுதியாக செய்வேன்" என்று கூறினார்.
Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
கூட்டத்தில் இறுதியில், திமுகவுக்கு, 50 வார்டுகள், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு, 15 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் திமுகவை சேர்ந்தவர் தான் மேயர் என்பது உறுதியாகி இருக்கிறது. துணைமேயர் பதவிக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே போட்டோ போட்டி இருக்கும் என தெரிகிறது.
செய்தியாளர் : விஜயகோபால் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.