திருச்சியில் மர்மகும்பல் வெறிச்செயல்... வழக்கறிஞர் வெட்டி படுகொலை...

திருச்சி கன்டோன்மண்ட் காவல் நிலையல்

திருச்சியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 4 பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரசம்பவம் நடந்துள்ளது. பழிக்கு பழி வாங்கும் செயல் எனக் கூறப்படும் நிலையில், சம்பவத்தின் முழுமையான பின்னணி என்ன?

 • Share this:
  திருச்சி மாநகரில் பீமநகர் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபி கண்ணன். 35 வயதான இவருக்கு கோதை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள், கோபி கண்ணனை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.

  கண்ணிமைக்கும் நேரத்தில் கும்பலாக சேர்ந்து கொண்டு மர்மநபர்கள் தாக்கிய நிலையில், சுதாரித்துக் கொண்டு ஓட ஆரம்பித்த கோபி கண்ணனை விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் கோபிகண்ணன் உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி கண்டோன்மெண்ட் காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு கீழபுதூரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற இளைஞர் அரியமங்கலத்தில் உள்ள தோப்பு ஒன்றில் குடிபோதையில் இருந்த போது மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

  மேலும் படிக்க..  சென்னை செம்மஞ்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்திய 2 உயிரிழப்புகள்

  இந்த படுகொலையில் கோபி கண்ணனுக்கும் தொடர்பு உள்ளதாக அப்போது கூறப்பட்டது. கோவில் நிலப்பிரச்சினை ஒன்றில் ஹேமந்த்குமார் தலையிட்டதால் அவரை மிரட்டி வருமாறு கோபிகண்ணன் தனது கும்பலிடம் கூற, அந்த கும்பல் குடிபோதையில் இருந்த ஹேமந்த்குமாரை வெட்டிக் கொன்றுள்ளது.

  இதுகுறித்த வழக்கில் கோபிகண்ணன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கறிஞர் கோபிகண்ணன் 4 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் முதல்கட்ட விசாரணையில் இச்சம்பவம் பழிக்குபழியாக செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

  மக்கள் நடமாட்டம் மிகுந்த பீமநகர் பகுதியில் வழக்கறிஞரை மர்மகும்பல் வெட்டி படுகொலைசெய்த சம்பவம் திருச்சி மாநகரில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: