செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ? என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, தமிழகத்தில் கட்டாய ஹிந்தி மொழித் திணிப்பை எதிர்த்தும், தாய் தமிழ்மொழியை காக்கவும் களம் கண்டனர், தமிழக மாணவர்களும், இளைஞர்களும்.
தமிழ்நாட்டில் கடந்த, 1938 - 39 மற்றும், 1964 - 65 என இரண்டு கட்டங்களாக கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்ட களத்தில், உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு மொழிக்காக, 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்தனர். இதில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். குறிப்பாக, கடந்த 1964ம் ஆண்டு ஜனவரி, 25ம் தேதி, திருச்சி ரயில்வே சந்திப்பு முன்பாக, கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து உயிரிழந்தார்.
இதையடுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மாநிலம் முழுக்க கொழுந்து விட்டு எரிய துவங்கியது. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்ட களத்திற்கு வந்தனர். 1965ம் ஆண்டு பிப்ரவரி, 23ம் தேதி விராலிமலை சண்முகம் விஷம் குடித்து இறந்தார். இதில், 1965ம் ஆண்டு நடந்த போராட்டம், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்ல.. பெரும் அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியது.
தமிழகத்தில், திராவிட கட்சிகளை அரியணை ஏற்றியது மட்டுமல்லாது, தொடர்ந்து திராவிடக் கட்சிகளே ஆள்வதற்கான அஸ்திவாரமாக அமைந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம். மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில், கீழப்பழுவூர் சின்னசாமி தீக்குளித்து இறந்த, ஜனவரி 25ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
Also Read : இந்திய மொழிகளின் அறிவை நமது மாணவர்களுக்கு மறுப்பது சரியில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி
கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் சமாதிகள் உள்ள திருச்சி தென்னூரில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஒன்று திரள்வர். பெருந்திரள் பேரணியாக சமாதிக்கு வந்து, மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்துவர். குறிப்பாக, திமுக- அதிமுக கட்சிகளின் மாணவரணி சார்பில் நடைபெறும் வீரவணக்க நாளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவர். கடந்த, 2016ம் ஆண்டு வீர வணக்கநாளில், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
திருச்சியில் மட்டுமே மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம் இருப்பதால், பேரணியாக வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி, திமுகவினர் வீர வணக்க நாளை கடைபிடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதனால், திமுகவினர் பேரணியை ரத்து செய்துவிட்டனர். அவர்களை பார்த்து அதிமுகவினரும் பேரணியை ரத்து செய்துவிட்டனர்.
தமிழ்த் தேசிய பேரியக்கம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் தான் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதனால், வீரவணக்க நாளில், அரசியல் கட்சியினர் கூட்டத்தால் திருவிழா போல காட்சியளிக்க வேண்டிய உய்யக்கொண்டான் ஆற்றங்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
Also read : நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம் உறுதி
'தமிழகத்தில் இன்னும் கட்டாய ஹிந்தி மொழி திணிப்புக்கான அபாயம் விட்டு போகவில்லை. மும்மொழி கொள்கை என்ற பின்வாசல் வழியே தொடர்கிறது. அதேநேரத்தில், தாய்தமிழை காக்க தன்னுயிரை கொடுத்தவர்களின்தியாகத்திற்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. மொழிப்போர் தியாகிகளின் நோக்கங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் ஒரு சம்பிரதாய, சடங்காக மட்டுமே மாறிவிட்டது. இன்று குறைந்தளவு எண்ணிக்கையிலாவது திமுக, அதிமுகவினர் பேரணியாக பங்கேற்று இருக்கலாம்' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
மேலும், 'மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கான நினைவுப் பேரரங்கம் அமைத்து, அதில் அனைத்து தியாகிகளின் சிலைகளையும், அவர்களின் வரலாற்றையும் வைக்க வேண்டும்' என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.