சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கவேண்டும்: திருச்சி சிறையில் ஈழத் தமிழர்கள் போராட்டம் - வருவாய்துறை பேச்சுவார்த்தை

ஈழத் தமிழர்கள் போராட்டம்

சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களை கொரோனா காலத்திலாவது விடுதலை செய்து, குடும்பத்தோடு வாழ வைக்க வேண்டும் என்று முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

  • Share this:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 78 பேர் &  வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர் என மொத்தம் 104 பேர் தற்போது உள்ளனர்.

குறிப்பாக இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள்  சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள். இலங்கையில் நடைபெற்ற போரினால் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறோம். பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
தங்களை பொய் வழக்கில் கைது செய்தும், குற்ற வழக்கின்  தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் சிறப்பு முகாமில் உள்ளோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே தங்கள் மீதான வழக்குகளை சட்டப்படி நடத்தி, விடுதலை செய்யக் கோரியும் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி தற்கொலை முயற்சி வரை சிறப்பு முகாமில் நடத்தியுள்ளனர்.

ஆனால், எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சிறப்பு முகாமிலேயே பல ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளனர். இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சட்ட ரீதியிலான உதவியும் மறுக்கப்பட்டு மனித உரிமையும் மீறப்படுகிறது என்கிறார்கள். சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று, மீண்டும் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாஸ்டர் செல்வம் என்பவர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில், சட்டவிரோதமாக எங்களை சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர். பத்தாண்டுகளாக பல்வேறு கட்டங்களாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சொல்லியும் பலன் இல்லை. நீங்கள் விடுதலை செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
கொடுமையான கொரோனா தொற்று பரவும் காலத்திலாவது எங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில்,தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு முகாமில் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து, திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் இலங்கைத் தமிழர்களிடம் துணை ஆட்சியர் & வருவாய்த்துறையினர், போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். ஒரு வாரத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை இல்லை என்றால் சிறப்பு முகாமிற்குள் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் இலங்கைத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: