திருச்சியில் பறிமுதல் செய்த வாகனங்களை கொளுத்தும் வெயிலில் இருந்து தண்ணீர் அடித்து பாதுகாக்கும் போலீசார்!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

திருச்சி மாநகரில் இதுவரை மொத்தம் 4,545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  • Share this:
திருச்சி மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறி சென்றவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடும் வெயிலால் பாதிக்கப்படாதவாறு வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் தெளித்து போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்காக திருச்சி மாநகரில் 8 நிலையான சோதனைச் சாவடிகள், 24 தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட மொத்தம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துணை ஆணையர் வேதரத்தினம் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். அதன்படி, தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதில், திருச்சியில் நேற்று மட்டும் 457 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகரில் இதுவரை மொத்தம் 4,545 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், இருசக்கர வாகனங்கள் - 4,352, நான்கு சக்கர வாகனங்கள் -53, ஆட்டோக்கள் (3 சக்கர வாகனங்கள்) - 140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெட்டவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் கொளுத்தும் வெயிலில் பாதிக்கப்படாமல் இருக்க தினமும் வாகனங்களில் மீது தண்ணீர் தெளிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பாதுகாப்பாகவும் உள்ளன என்று மாநகர காவல் துறையினர் எடுக்கும் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் மிக மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: