புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது. வெள்ளனூர், பொம்மாடிமலை, தொடையூர் ,நார்த்தாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்த நிலையில் பொம்மாடி மலை - துடையூர் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. சுமார் 20 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது.
இது தெரியாமல் அக்கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மனைவியும் ஒசூர் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவருமான சத்யா (31) தனது மாமியார் ஜெயாம்மாள் (63) இருவரும் காரில் சென்றனர். கொஞ்சம் தண்ணீர் சென்று விடலாம் நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், தேங்கிய தண்ணீரில் சுரங்கப் பாதையில் கார் நின்று விட்டது.
மள மளவென்று காருக்குள் மழைநீர் நீர் புகுந்தது. இதில், காரின் சைலன்சருக்குள் தண்ணீர்ப் புகுந்துவிட்டதால், காரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவரது மாமியார் மட்டும் கார் கதவை திறந்து கொண்டு நீச்சல் அடித்து கரை சேர்ந்துள்ளார். ஆனால் சத்தியா சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதனைக் கழட்டிக் கொண்டு உடனே வெளியே வர முடியாமல், காருக்குள் சிக்கி, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் சத்யாவின் சடலத்தை காரில் இருந்து பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தங்கள் கிராமத்திற்கு செல்லும் தரை பாலத்தை மேம்பாலமாக மாற்றி தரக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களுடைய கருத்தை கேட்காமலேயே இந்த சுரங்கப் பாதையை அமைத்துள்ளனர்.
மழைக்காலங்களில் இதுபோல் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் பெரும் அசம்பாவிதம் நடந்து விடும் என்பதற்காகத்தான் தங்கள் கிராம மக்கள் போராடி வந்தோம். இனியாவது அந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி துடையூர், வெள்ளனூர், பொம்மாடிமலை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Also read: ஆளுநர் நியமனத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை: திருமாவளவன்
இதன் பின்னர் மக்களோடு போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், ரயில்வே பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தால்தான் போராட்டத்தை தொடருவோம் என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சுரங்கப் பாதை மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் சுமார் 10 கி.மீ சுற்றிச் செல்வதாகவும் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இன்று காலையும் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கீரனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில் வருவாய்துறை, காவல் துறையினர், ரயில்வே துறையினர் பொது மக்களுடன் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், துடையூர் கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே சுரங்க பாதைக்கு அருகே ஏற்கனவே மக்களின் பயன்பாட்டில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள ரயில்வே கேட் பாதையை உடனடியாக திறந்து விடுவது.
நிரந்தர பாதை அமைக்கும் வரையில் மக்கள் இந்த பாதையை பயன்படுத்தலாம். உயிரிழந்த அரசு மருத்துவர் சத்யாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கும், மத்திய அரசு மற்றும் ரயில்வே துறைக்க்கும் பரிந்துரை செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் பயன்பாட்டிற்காக தற்போது திறக்கப்படும் ரயில்வே கேட் பாதையை கண்காணிக்க பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களில் கோரிக்கயை ஏற்று தற்போது மருத்துவர் சத்யா உயிரிழப்பிற்கு காரணமான சுரங்க பாதையை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.