• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் - டிஜிபி சைலேந்திர பாபு

துப்பாக்கியை பயன்படுத்த தயங்க வேண்டாம் - டிஜிபி சைலேந்திர பாபு

சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதனின் இல்லத்திற்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

  • Share this:
திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதனின் இல்லத்திற்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு சென்று, அவரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது பேசிய அவர், போலீசார் ரோந்து பணிக்கு செல்லும் பொழுது துப்பாக்கியுடன் செல்ல வேண்டும் என்றும், உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது எனவும் கூறினார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 20 ஆம் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது ஆடு திருடர்களை 15 கிலோ மீட்டருக்கு மேலாக துரத்தி சென்று, புதுக்கோட்டை மாவட்டம் பள்ளப்பட்டி அருகே பிடித்தார்.

அப்பொழுது, ஆடு திருடர்களால் பூமிநாதன் பின்புற தலையில் இறைச்சி வெட்டும் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பூமிநாதன் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பொறுப்பு கார்த்திகேயன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் மோப்பநாய் உதவியுடன் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பொறுப்பு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி மற்றும் இறப்பதற்கு முன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் யாரிடம் பேசினார் என்பது குறித்து செல்போன் சிக்னல்களை  வைத்து கொலை செய்த ஆடு திருடர்களை நேற்று கைது செய்தனர்.

இதில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மணிகண்டன் மற்ற இருவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 வயது, 14 வயதுடைய இரண்டு சிறார்களும் என 3 பேரையும் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களை புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மணிகண்டனை புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிறையில் அடைத்தனர். மற்ற 9 வயது 14 வயது சீறார்களை திருச்சி மாநகர் இபி சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு பள்ளியில் 15 நாள்கள் காவலுக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு, இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்சி வந்தடைந்தார். அவர் கன்டோன்மென்ட் அருகே உள்ள காவல்துறை ஓய்வகத்திற்குச் சென்று, அங்கிருந்து இறந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனின் நவல்பட்டு சோழமாநகரில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று பூமிநாதன் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து திருச்சி மண்டல காவல்துறை தலைவர் பொறுப்பு கார்த்திகேயன், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர், நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்று, கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இறந்தவுடன் தனிப்படை அமைத்து 36 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டினார். சைலேந்திரபாபு வருகையால் 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதிக்கு வந்தனர்.

முன்னதாக இறந்த பூமிநாதன் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, “பூமிநாதனின் இழப்பு பெரிய இழப்பாக இருக்கிறது. தீவிரவாத தடுப்பு பிரிவில் சிறந்த கமெண்ட் பயிற்சி எடுத்து முதல்வரிடம் பதக்கம் பெற்றவர். வீரத்தோடும் விவேகத்தோடும்தான் பணிபுரிந்துள்ளார்.

15 கிலோமீட்டர் தூரத்தில் சென்று ஆடு திருடர்களை பிடித்து ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளார். ஆடு திருடர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் பூமிநாதன் இறந்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஒரு கோடி நிவாரண தொகையும் பணி வழங்குவதாகவும் அறிவித்தார்.

1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையை காப்பாற்றியுள்ளார்.

ரோந்து பணியில் செல்வார்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று தெரிவித்துள்ளோம். சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது,

52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குற்றவாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளார்.
இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர்தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

Must Read : பொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்

இந்த கொலை குற்றத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் புலன் விசாரணை முழுமையாக விசாரித்து விட்டேன், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை இவர்கள்தான் கொலை செய்துள்ளனர் எனவும், 100% ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை அவசியமில்லை என்று தெரிவித்தார்.

செய்தியாளர் - இ.கதிரவன், திருச்சி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: