திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை - வனத்துறையினர் நடவடிக்கை

யானைக்கு கொரோனா பரிசோதனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியில் வனத்துறையினர் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

  • Share this:
திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சளி மாதிரி உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வனத்துறையின் பராமரிப்பிலுள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி,  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்திலுள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் உள்ள மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி மற்றும் ஜமீலா ஆகிய 6 யானைகளுக்கும்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் சுஜாதா மேற்பார்வையில், கோவையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான குழுவினர் 6 யானைகளிடமிருந்தும் சளி மாதிரிகளை சேகரித்தனர்.

கொரோனா பரிசோதனை


யானைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் உத்தரபிரதேசத்திலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கொரோனா மற்றும் பிற நோய் கிருமி தாக்குதல் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். இதில் வரக்கூடிய முடிவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த மே 26ஆம் தேதி வண்டலூர் பூங்காவில் இருந்த 5 சிங்கங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 11 சிங்கங்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நீலா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்தது. இதனால் பிற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் மட்டுமல்லாமல் குரங்கு உள்ளிட்ட மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், ஹைதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் உள்ள சிங்கங்கள் சரணாலயத்தில் ஒரு பெண் சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Must Read : டாஸ்மாக் திறப்பு அவசியமா?... இதுதான் விடியலா? - முதலமைச்சரை சாடும் வானதி சீனிவாசன்

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த நீலா எனும் சிங்கத்திற்கு Canine Distemper வைரஸ் பாதிப்பும் இருந்ததாக உத்தரபிரதேத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள யானைகள் உள்ளிட்ட பிற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிய பரிசோதனைகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன.
Published by:Suresh V
First published: