ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கம்... சசிகலா - தினகரன் இடையே உச்சம் அடையும் பனிப்போர்

அமமுகவில் இருந்து நிர்வாகிகள் நீக்கம்... சசிகலா - தினகரன் இடையே உச்சம் அடையும் பனிப்போர்

சசிகலா - டிடிவி தினகரன்

சசிகலா - டிடிவி தினகரன்

சசிகலா- தினகரன் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல குடும்பப் பிரச்சினைகளும் தலை தூக்கியுள்ளன. முடிவாக, தினகரனை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் செய்ய ஆசைப்படுகிறார் சசிகலா என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

சொத்து குவிப்பு வழக்கில் சிறைச் சென்று திரும்பி சசிகலாவிற்கு, பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு; அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு; அந்நிய செலாவணி வழக்கு, கொடநாடு வழக்கு என்று அவர் செல்லும் பாதையெல்லாம் பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன.

இதற்கிடையே, 'வெளியே வீசுவது வெறும் புயல்தான். ஆனால், அவரது குடும்பத்தில், சூறாவளியே சுழற்றி அடிக்கிறது' என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். இதுகுறித்து சசிகலா தீவிர ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது, "கடந்த மார்ச், 21ம் தேதி ராகு- கேது பெயர்ச்சி அன்று, வி.கே. சசிகலா தனது முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை தஞ்சையில் துவங்கி, திருச்சியில் முடித்தார்.

தொடர்ந்து, ஏப்ரல் 11ம் தேதி தனது, 2ம் கட்ட ஆன்மிக சுற்றுப் பயணத்தை திருச்சியில் துவங்கினார்.

முதலில், சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும், சமயபுரம் டோல்கேட் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து, முசிறி அருகே திருவாசி மாற்றுரைதீஸ்வரர் கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில்களில் ஸ்வாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த கையோடு, எடப்பாடி, சேலம் ராஜகணபதி கோயிலில் ஆன்மீக சுற்றுப் பயணத்தை நிறைவுச் செய்தார்.

இதையும் படிங்க: துணைவேந்தர் நியமனம்.. மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

அன்றைய தினமே, சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வழக்கை மேல் முறையீடு செய்யப் போவதாக' அறிவித்து சசிகலா தங்களை சாந்தப்படுத்தியதாக தெரிவித்தனர். 

தினகரன் அதிரடி

இந் நிலையில், சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்ததாக, திருச்சி வடக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், முசிறி தெற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார், முசிறி நகரச் செயலாளர் ராமசாமி ஆகியோரை அதிரடியாக நீக்கி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா ஆதரவாளர்கள் கூறும்போது, பெயரளவில், அமமுக என்று தினகரன் கட்சி நடத்தினாலும், அங்குள்ள, 90 சதவீதம் பேர் சசிகலா ஆதரவாளர்கள். இதைவிட கொடுமை, சசிகலாவின், 2 கட்ட சுற்றுப்பயணத்திலும் கூடவே இருந்தது, அமமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகிக்கும் சாருபாலா தொண்டைமான்.

மேலும் படிக்க: காலங்கள் செல்ல செல்ல பெரியார் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது: நடிகர் சிவக்குமார்

'தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக' எதற்கு அவரை விட்டுவிட்டு சாதாரண நபர்களை எல்லாம் தினகரன் நீக்கியுள்ளார் என்று தெரியவில்லை. ஆனால் அவர், 'சசிகலாவிற்கு எதிராக இனி நான் செயல்படுவேன்' என்பதை இதன் மூலம் கோடிட்டு காட்டியுள்ளார் என்பது மட்டும் நன்கு தெரிகிறது. 'காலம் கடந்த ஞானம் இது' என்பதை இனி அவர் விரைவில் உணர்ந்துக் கொள்வார். விரைவில் அமமுக கூடாரம் காலியாகும்" என்றனர்.

திவாகரன்  பராக்

சசிகலாவிற்கும், தினகரனுக்கும் என்ன பிரச்சினை? என்று சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளருமான திவாகரன் ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.

"பெங்களூரு சிறைக்கு சென்றபோது, சசிகலா கட்சியையும், ஆட்சியையும் தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார்.

ஆனால் அவர் சிறையில் இருந்து திரும்பியபோது, அவரை வைத்து ஆரம்பித்த அமமுக கட்சிப் பதவி கூட அவருக்கு இல்லாத வகையில், அனைத்தையும் காலி செய்து வைத்திருந்தார் தினகரன்.

இதை படிக்க: கஞ்சா கடத்தல் கும்பலோடு பிரியாணி விருந்து.. சொகுசு ஹோட்டலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் - சர்ச்சையை ஏற்படுத்திய போட்டோ

இதனால் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருந்த சசிகலா அவரை சந்திப்பது இல்லை. அவரிடம் பேசுவதை கூட தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், சசிகலா தனது மகன் போல பாவிக்கும் திவாகரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து துடிதுடித்துப் போன சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த திவாகரனை நேரில் சந்தித்துள்ளார்.

அப்போது இருதரப்பிலும் மீண்டும் மலர்ந்த உறவு, தினகரனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது. அதன் வெளிப்பாடு தான் திருச்சியில் நிர்வாகிகள் நீக்கம்" என்றனர்.

அதிமுக நோக்கி..?

சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து தினகரன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, "அதிமுக பொதுச்செயலாளர் பதவி செல்லும் என்று சட்டரீதியாகவே வழக்கு தொடர்ந்து ஜெயிக்க முடியும் என்று தினகரன் உறுதியாக நம்புகிறார்.

ஆனால், திவாகரன் துணையோடு அதிமுகவை கைப்பற்ற சசிகலா துடிக்கிறார். ஏற்கனவே ஓ. பன்னீர் செல்வம் தரப்பு தனக்கு சாதகமாக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை சரி கட்டும் வேலையை திவாகரனை கொண்டு சசிகலா செய்து வருகிறார். இதில் தினகரனுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.

இதனால், சசிகலா- தினகரன் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல குடும்பப் பிரச்சினைகளும் தலை தூக்கியுள்ளன. முடிவாக, தினகரனை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் செய்ய ஆசைப்படுகிறார் சசிகலா; அதுவும், திவாவரன் துணையோடு. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர் போக போக உணர்ந்து கொள்வார். இனி, தமிழகத்தில் தினகரனை தவிர்த்துவிட்டு யாரும் அரசியல் செய்ய முடியாது" என்றனர்.

சசிகலாவை வரவேற்க சென்ற அமமுகவினர் நீக்கம் குறித்து, மதுரையில் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதிமுக சின்னங்களை பயன்படுத்தியதால் தான் அவர்கள் நீக்கப்பட்டனர்" என்று பதிலளித்துள்ளார்.

Published by:Murugesh M
First published:

Tags: ADMK, AMMK, Sasikala, TTV Dinakaran