Home /News /tamil-nadu /

“அவதூறுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை, வசவாளர்கள் வாழ்க“ - திருச்சி வணிகர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை

“அவதூறுகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை, வசவாளர்கள் வாழ்க“ - திருச்சி வணிகர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

யார் யாரோ எதை எதையோ சொல்லி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் அதற்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என்று திருச்சி வணிகர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருச்சி வணிகர் சங்க மாநாட்டில் பங்கேற்ற  முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றம் நடைபெறுகிற நேரத்தில் ஆட்சிப் பொறுப்பிலோ அல்லது எதிர்க் கட்சியாகவோ இருந்தாலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வதை நான் தவிர்த்து விடுவதுண்டு. ஆனால், இன்றைக்கு சட்டமன்றம் சென்று கேள்வி நேர நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன்பிறகு விமானத்தைப் பிடித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

கடந்த, 1982ம் ஆண்டு அதிமுக அரசு நுழைவு வரி கொண்டு வந்து உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து வணிகர்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இப்படி உக்கிரமான போராட்டம் நடத்திய வணிகர்களை கைது செய்த நாள் மே 5. இது திமுக ஆட்சி இல்லை. நம்ம (வணிகர்கள்) ஆட்சி. இக்கட்டான கொரோனா சமயத்திலும், அரசுக்கு நிதி கொடுத்த வணிகர்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்திருக்கிறேன்.

திருச்சி என்றாலே தி.மு.க.,வுக்கு ஒரு திருப்புமுனை. அதேபோல, வணிகர்களுக்கு இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை உருவாக்கும்.
தி.மு.க., ஆட்சியானது வணிகர்களின் நலனை பேணக்கூடிய ஒரு ஆட்சியாகத் தான் இருந்திருக்கிறது. வணிகர்களின் நலன் காக்கப்பட்டால் தான், அரசுக்கு வரக்கூடிய வரிகளின் நலன்களும் காக்கப்படும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் வணிகர் நல வாரியமே அமைக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு வணிகர்களை அழைத்து கருத்துக் கேட்க வேண்டுமென்பதை அறிமுகம் செய்தவர் கருணாநிதி. அதையே நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு எந்தவித தொல்லைகளும் இருக்கக்கூடாது என்பது குறித்து தமிழக டி.ஜி.பியிடம் ஆலோசனை செய்தேன். அதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'காவல் உதவி செயலி'யில், வணிகர்களுக்கென தனி பிரிவையும் உருவாக்கச் சொல்லியிருக்கிறோம்.

Also Read : அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது - அமைச்சர் அறிவிப்பு

வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுக்க நேரிட்டால், அந்த செயலியின் வழியாக புகார் அளித்தால் உடனே ரோந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவார்கள். ஓரிரு மாதங்களில் இது துவங்கப் போகிறது. இது திராவிட மாடலில் நடைபெறக்கூடிய ஆட்சி. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆட்சி.

பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே வளர்வதை பொருளாதார வளர்ச்சி என நான் நினைக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் மட்டுமல்ல, உங்களைப் போன்ற சிறு வணிகர்களும் வளரணும். வணிகர்களின் நலன் நிச்சயமாக பாதுகாக்கப்படும்.  வணிகர்கள் நாள்தோறும் பல்லாயிரம் மக்களைச் சந்திக்கிறீர்கள். இந்த அரசினுடைய நல்ல திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் தூதுவர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.

மக்களிடம் பேசி அவர்களது கருத்துகளை, யோசனைகளை பெற்று, அதை என்னிடம் கூறுங்கள். நல்ல யோசனை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அதை திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆள் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்றார்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கடைகள் வாடகை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். ஒரு லட்சமாக உள்ள ஓய்வூதியத் தொகை, 3 லட்சமாக உயர்த்தப்படும். யார் யாரோ எதை எதையோ சொல்லி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, கருணாநிதி ஆட்சி. மொத்தத்தில் திராவிட மாடல் ஆட்சி. திட்டமிட்டு பரப்பப்படுகின்ற வதந்திகளுக்கு பதில் சொல்லி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 'வசவாளர்கள் வாழ்க' என்ற அண்ணாவின் வசனத்தையே அவர்களுக்கு பதிலாக அளிக்கிறேன்" என்றார்.
Published by:Vijay R
First published:

Tags: DMK, MK Stalin, Trichy

அடுத்த செய்தி