பேரவையில் நீட் மசோதாவை ஆதரித்த அதிமுக, பாமக.. பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறியது என்ன?

பேரவையில் நீட் மசோதாவை ஆதரித்த அதிமுக, பாமக.. பாஜக தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறியது என்ன?

பா.ஜ.க கூட்டணியில் உள்ள அதிமுக, பா.ம.க தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை ஆதரித்தது, குறித்து பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
பா.ஜ.க  மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி விமான நிலையம் அருகே ஒயர்லெஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை,  முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ண உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர், தேசியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, முன்னள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர் சந்தித்தினர்.

அப்போது சி.டி.ரவி கூறுகையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க சார்பில், செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை சேவா சமர்ப்பியன் பிரச்சாரம் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம்களை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளோம் என்றார்.

திமுக அரசின் தேன்நிலவு காலம் முடிந்து விட்டது. மக்கள் நலத்திட்டங்களை, ஆக்கப்பூர்வமான பணிகளை விட மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுக்கிறார்கள். பிரதமர், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமே பேசி வருகிறார்கள்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, திமுக அரசு 700 குற்றவாளிகளை விடுதலை செய்யும் முடிவு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே எதிரானது. இது ஆபத்தான முடிவு. தேசவிரோத செயலாகும் என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் 4.70 லட்சம் ஹெக்டேர் கோயில் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றை மீட்காமல், இந்து விரோதச் செயல்களை திமுக அரசு தொடர்கிறது.

Also read: பின்னணியில் ’கவுண்டிங் மிஷின்’.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை.. வானதி சீனிவாசன் விளக்கம்!!

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். இதை மறைத்து, திமுக எதிர்மறைப் பிரச்சாரம் செய்கிறது. சட்டப்பேரவையில் இன்று நீட் விலக்கு  மசோதாவை அதிமுக, பா.ம.க ஆதரித்துள்ளது, அவர்கள் கட்சியின் நிலை. ஆனால், பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் போட்டியிடும். தனித்தா? கூட்டணியா? என்பதை மாநில நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றார்.

இலங்கை தீவில் சீன நிறுவனங்களின் முதலீடுகளால், தமிழ்நாட்டுக்கு, இந்தியாவிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. ஏனென்றால், 1962ல் உள்ள இந்தியா அல்ல, 2021ல் உள்ள இந்தியா எதையும் எதிர்கொள்வோம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: