திருச்சியில் ரூ.40 கோடி செலவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி நகராட்சியானது கடந்த, 1994ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, 1996ம் ஆண்டு முதல் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி பதவியேற்றார்.
அன்றில் இருந்து மேயருக்கு செங்கோல் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், சேலம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், 4 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கோல் ஒன்றை திருச்சி மாநகராட்சி மேயருக்கு நன்கொடையாக வழங்கினார்.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற, மாவட்ட ஆட்சியர் சிவராசு, வெள்ளியிலான செங்கோலை, திருச்சி மேயர் அன்பழகனுக்கு வழங்கினார்.
Also read... சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தள்ளுபடி
திருச்சி மாநகராட்சி மையக் கட்டிடம், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டுவது என முதல் மாமன்றக் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், திருச்சி மாநகராட்சியில் உள்ள, 4 கோட்டங்கள், 5 மண்டலமாக உயர்த்தப்பட்டுள்ளதன. 5வது மண்டலத்திற்கான புதிய கட்டிடம், ஜெகதாபுரம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் கீழ் அமைக்க நிதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.