திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து, தஞ்சை மாவட்டம் புதுக்குடி நோக்கி நேற்று மாலை அரசு மாநகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அதில் ஏறிய பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்றுக் கொண்டு பயணம் செய்துள்ளனர். அவர்களை பலமுறை மேலே வரும்படி நடத்துனர் செல்வேந்திரன் கூறியும், அவர்கள் படிக்கட்டில் இருந்து மேலே வரவில்லை. மாறாக, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, காந்தி மார்க்கெட்டில் நின்றுக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர்களிடம், செல்வேந்திரன் கூறியதாக தெரிகிறது.
போலீசார், மாணவர்களை கடுமையாக எச்சரித்து பேருந்தின் உள்ளே அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களில் ஒருவர், திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, நடத்துனரை சரமாரியாக தாக்கிவிட்டு, பேருந்தில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத செல்வேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவர் கைப்பையில் வைத்திருந்த பணம், காசுகள் சிதறிக் கொட்டின.
இதைக்கண்டு பதறிப்போன பயணிகள், செல்வேந்திரனை தூக்கி ஆசுவாசப்படுத்தியதோடு, சிதறிய பணத்தை சேகரித்தும் கொடுத்தனர். சம்பவம் குறித்து அறிந்த, அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், 'செல்வேந்திரனை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி' பேருந்துக்களை சாலை ஓரமாக ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தத் தொடங்கினர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் அப்பகுதியில் பரபரப்பான சூழலும் நிலவியது. தகவலறிந்த, அரியமங்கலம் போலீசார், 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தன் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதுகுறித்து செல்வேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், தாக்குதல் நடத்திய மாணவனை தேடி வருகின்றனர்.
Also read... The Kashmir Files | 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்திற்கு வரிவிலக்கு அளித்த புதுச்சேரி அரசு
தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் வன்முறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திருச்சியில் மாணவன் ஒருவர் அரசு பேருந்து நடத்துனரிடம் அத்துமீறிய சம்பவம் நடந்த பகுதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின், திருவெறும்பூர் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.