Home /News /tamil-nadu /

எழுச்சி தினமும், திருநெல்வேலி கலக வரலாறும் - இளைய தலைமுறைகளுக்கு தெரிவிக்கப்படுமா?

எழுச்சி தினமும், திருநெல்வேலி கலக வரலாறும் - இளைய தலைமுறைகளுக்கு தெரிவிக்கப்படுமா?

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி மக்களிடையே சுதந்திர வேட்கையை ஊட்டிய கலக தினம் நெல்லை எழுச்சி தினமாக அறிவிக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் 1908-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நாளை சுதந்திர போராட்ட வீரர்கள் சுயராஜ்ய நாளாக கொண்டாடினர்.

1908-ம் ஆண்டு மார்ச் 9 -ம் தேதி திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் தற்போது தைப்பூச மண்டபம் அமைந்துள்ள பகுதியில் தடையை மீறி விடுதலை விழா நடைபெற்றது. இதில் வ.உ சிதம்பரனார் , சுப்பிரமணிய சிவா, ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினர். அவர்கள் மார்ச் 12-ல் கைது செய்யப்பட்டனர்.



இதனால் நெல்லையில் பெரும் கலவரம் மூண்டது. காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்த நாளான மார்ச் 13 -ம் தேதி சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

பொதுச் சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டது மக்கள் சாதி சமய வேறுபாடுகளை மறந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தை தீவிர படுத்தினர்.

இதையடுத்து வழக்கு விசாரணையில் வ.உ.சிக்கு 40 ஆண்டு சிறை தண்டனையும் சுப்பிரமணிய சிவாவிற்கு 10 ஆண்டுகள்  சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.



சுதந்திர போராட்டத்தை தூண்டும் விதமாக நடைபெற்ற இந்த போராட்டம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திருநெல்வேலி கலகம் என்று பதிவாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நெல்லை மாநகராட்சி சுதந்திரத்திற்கான இந்த போராட்டம் கலகம் என்று அழைப்பதை மாற்றி திருநெல்வேலி எழுச்சி தினம் என மாற்றித் தீர்மானம் நிறைவேற்றினர்.

எதிர்கால சந்ததியினர் திருநெல்வேலி  எழுச்சி தினம் குறித்த வரலாறை தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பூலித்தேவன் முதல் கட்டபொம்மன், வ.உ.சி, பாரதி என பலர் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவர்கள்.



வீரர்கள் மட்டுமல்ல நெல்லை மண்ணுக்கும் சுதந்திர வேட்கையில் மிக முக்கிய பங்குண்டு என்பதை உணர்த்திய திருநெல்வேலி எழுச்சி தினத்தை நாடறியச் செய்வார்களா ஆட்சியாளர்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Nellai

அடுத்த செய்தி