18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை 

news18
Updated: June 13, 2018, 9:18 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை 
கோப்புப் படம்
news18
Updated: June 13, 2018, 9:18 PM IST
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை

தர்மயுத்தம்ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவால்  சசிகலா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அணிகள் உருவாகின. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைசென்ற பின்னர், அவர் ஓரங்கட்டப்பட்டார். இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரையும் எடப்பாடி பழனிசாமி அணியினர் புறக்கணித்தனர். முன்னதாக சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தர்மயுத்தம் நடத்தினர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கடந்த செப்டம்பரில் இணைந்தனர். அதன்பிறகு, இருதரப்பினரும் செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தி சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் செல்லாது என்று அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

போர்க்கொடி தூக்கினர்: சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டதைத் தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன் உள்பட 19 பேர் போர்க்கொடி தூக்கியதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி, ஆளுநர் வித்யாசாகரை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ்  ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்றும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, 19 பேரும் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கம் திருப்தியில்லை என்று கூறிய சபாநாயகர் தனபால், மீண்டும் விளக்கம் அளிக்கும்படி 19 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸுக்கு 18 பேர் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், ஜக்கையன் மட்டும் சபாநாயகரைச் சந்தித்து விளக்கம் அளித்ததோடு, முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், ஜக்கையனைத் தவிர்த்து தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, ஆர்.முருகன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, ஜெயந்தி பத்மநாபன், பழனியப்பன், எஸ். முத்தையா, வெற்றிவேல், என்.ஜி.பார்த்திபன், கோதண்டபாணி, ஏழுமலை, ரெங்கசாமி, தங்கதுரை, ஆர்.பாலசுப்பிரமணி, எஸ்.ஜி.சுப்ரமணியன், ஆர்.சுந்தரராஜ், கே.உமா மகேஸ்வரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
Loading...
நீதிமன்றத்தில் வழக்கு: சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கு தனி நீதிபதி ரவி சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தநிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என  இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். பின்னர், அரசியல் சாசனம் தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை ஒன்றிற்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார்.

இதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் முத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிட்டனர். தமிழக அரசுக்கு எதிராக செயல்படாமல் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆளுனரை சந்தித்து மனு அளித்ததாக எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதிடப்பட்டது. தங்களுக்கு எதிராக அரசு கொறடா புகார் அளித்த பிறகு தங்களிடம் முழுமையான விளக்கம் கேட்காமல் சபாநாயகர் பிறப்பித்த இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் வாதிடப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத சபாநாயகர், தங்கள் மீது மட்டும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்தது அரசியல் நோக்கம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சபாநாயகரின் உத்தரவு என்பது ஒரு தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புக்கு சமமானது என்பதால் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாகவும் முத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

அரசு கொறடா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, முதல்வருக்கு எதிராக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு அளித்த மறுநாளே எதிர்கட்சி தலைவரும் ஆளுநரை சந்தித்தார். இதிலிருந்தே டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்து அரசை கவிழ்க்க  முயற்சித்தது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உட்கட்சிக்குள் பேசி முடிக்காமல் ஆளுநரை சந்தித்தது மரபுக்கு எதிரானது என்பதாலேயே 18 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததில் இயற்கை நீதி முழுமையாக பின்பற்றப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார் குறித்து முழுமையாக ஆராய்ந்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தகுதி நீக்கம் செய்வதற்கு முன்னர் 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க போதிய அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நாளை தீர்ப்பு: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகிறது.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...