சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின் செயலாளர் கார்த்திகேயன், தேர்வு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் எஸ்எப்ஐ, ஏஐஎஸ்எப், எம்எஸ்எப்,
திமுக, விசிக, மதிமுக மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட 11 மாணவர்கள் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடப்பு செமஸ்டர் தேர்வை நேரில் எதிர்கொள்வது குறித்தான கருத்துக்களை கேட்டு அறிந்தனர்.
மாணவர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களிடம் நடப்பு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வாயிலாக எழுதுவதை தவிர்த்து அரசு அறிவித்துள்ள படி நேரடியாகவே செமஸ்டர் தேர்வை 1 மாத இன்னும் கால அவகாசம் அளித்து தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் ஆணைக்கிணங்க மாணவர்கள் மாணவர் சங்கம் பிரதிநிதிகளை அழைத்து பேசியுள்ளோம்.11 அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். மாணவர்களின் கருத்துக்களை கேட்டதில் ஆன்லைன் தேர்வு வேண்டாம் என்றும் நேரடி தேர்வுக்கு ஒரு மாதம் கால அவகாசம் கோரியுள்ளனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 2 மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்றும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். மேலும் ஆன்லைன் தேர்வு கோரி போராடிய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்றும் அதற்கான உறுதியை மாணவர்களுக்கு அளித்துள்ளோம்.
இரண்டு மாத கால அவகாசத்தில் நடத்த வேண்டிய பாடங்களை நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வும் நடத்தப்பட்டு நேர்மையான முறையில் அதன் பின்னர் தான் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த முடிவை அனைத்து மாணவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.