டிக் டாக் செயலி தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதன்மூலம் சிறிது புகழடைந்தவர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் இந்த ரவுடி பேபி சூர்யா. இவரது இயற்பெயர் சுப்புலட்சுமி. தொடக்கத்தில் டிக் டாக்கில் திரை இசை பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானார். தற்போது யூடியூப்பில் ஆபாசமாக பேசி அடாவடியாக வீடியோக்கள் வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
ஆரம்பத்தில் கலக்கல் ராணியாக இருந்த சூர்யா அதன்பின் நிஜ ரவுடியாகவே மாறிப்போனார். தனக்கு ரசிகர்கள் உள்ளனர் என்று தன்னை தானே பெருமையடித்துக்கொள்ளும் சூர்யா, இவருக்கு அறிவுரை கூறுபவர்களையும் சரமாரியாக திட்டி வீடியோ வெளியிட்டார். தனது யூடியூப் வீடியோக்களில் சொந்தப் பிரச்னைகளைக் கொட்டி தகாத வார்த்தைகளால் பலரையும் வறுத்தெடுக்க ஆரம்பித்தார்.
சிங்கப்பூர் சிக்கல், டிக் டாக் இலக்கியாவுடன் மோதல், யூடியூபர் சூர்யாதேவியுடன் சர்ச்சை என சோஷியல் மீடியாக்களில் உலாவும் நெட்டிசன்களுக்கு கண்டெண்டாக மாறினார். இறுதியில் வந்து ரவுடி பேபி சூர்யாவுடன் இணைந்தவர் தான் சிக்கந்தர்ஷா எனும் சிக்கா. சூர்யாவின் ஆண்நண்பர் இவர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பம் இருந்தாலும் சிக்காவும், ரவுடி பேபி சூர்யாவும் இணைந்து டூயட் பாடினார்கள்.
அவ்வப்போது தகராறு ஏற்பட்டு இருவரும் ஆபாசமாக திட்டி வீடியோ பதிவிடுவார்கள். வீடியோக்களில் முட்டி மோதிக்கொண்டாலும் மீண்டும் இணைந்துக்கொள்வார்கள். இவர்களின் ஆபாச பேச்சுகளும் எல்லை மீறிப்போகவே பார்வையாளர்கள் எரிச்சலடைந்தனர் இந்த நிலையில்தான் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த யூடியூபர் தம்பதியை இழிவாக பேசியும், அவர்களின் தொலைபேசி எண்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரவுடிபேபி சூர்யா மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் பேரில் மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கத்தர்ஷா ஆகியோரை கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி கைது செய்தனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் எந்த நேரத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகலாம் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடிபேபி சூர்யாவையும், சிக்கந்தர்ஷாவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.