Exclusive : அதிமுகவில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது: தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

Exclusive : அதிமுகவில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது: தோப்பு வெங்கடாசலம் குற்றச்சாட்டு

தோப்பு வெங்கடாச்சலம்

அதிமுக தலைமை ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றார்.

  • Share this:
    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து நியூஸ் 18-க்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், 40 ஆண்டுகாலம் அதிமுகவின் உண்மைத் தொண்டனாக இருந்தவன் நான் என்றும், மாணவனாக இருந்த காலம் தொட்டே அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்ததாகவும் கூறினார்.

    2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்றும், அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த காரணத்தை முன்வைத்து என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் கூறிய அவர், பெருந்துறை முன்னர் தொழிற்சங்கம் பலமாக இருந்த பகுதி என்றும், அதை தனது கடும் உழைப்பால் அதிமுகவின் கோட்டையாக மாற்றியதாகவும் கூறினார்.

    என்னை கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் இனி எதைப் பேசி என்னவாகப் போகிறது என்று வருத்தப்பட்ட தோப்பு வெங்கடாசலம், தற்போது பெருந்துறை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர், உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டவர் என்றும், அதன் காரணமாக கட்சியால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர் என்றும் கூறினார்.

    சுயேச்சையாக போட்டியிடுவதாகக் கூறி என்னை தற்போது கட்சியில் இருந்து நீக்கும் அதிமுக தலைமை, அவரை ஏன் நீக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன், தற்போதய அதிமுக தலைமை ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றார். 2011 தேர்தலின்போதும், 2016 தேர்தலின் போதும் பல்வேறு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பல்வேறு தொகுதிகளில் அயராது உழைத்ததாக கூறிய தோப்பு வெங்கடாசலம், ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாக, தான் செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் தனக்கு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வழங்கினார் எனவும் கூறினார்.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெருந்துறை மக்களுக்கு அதிமுக தலைமை எதுவும் செய்யவில்லை என்றும், அதிமுகவைச் சேர்ந்த ஒரு தொண்டரின் குடும்பங்களைகூட வாழவைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அரசியல் போட்டி காரணமாகவே தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், அதிமுக அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் தயங்குவதில்லை என்றும் கூறினார்.

    தான் அமைச்சராக இருந்தபோதும், மற்ற நேரங்களிலும் பாகுபாடு இன்றி அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து சென்றதாகவும், அனைத்து சமுதாயத்தினருக்கும் சமமான அளவில் வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறிய தோப்பு வெங்கடாசம், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்ந்த சமுதாயத்திற்கு மட்டுமே முக்கியதும் தரப்படுகின்றது என்றும், மற்ற சமுதாயத்தினர் திட்டமிட்டே ஓரங்கட்டப்படுவதாகவும் கூறினார்.

    Must Read : ‘எடப்பாடி பழனிசாமி விவசாயி இல்லை... விஷவாயு’ : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

     

    தான் வேறு எந்த கட்சிக்கும் போகப்போவது இல்லை என்றும், பெருந்துறை மக்களை நம்பி, அவர்களின் அன்பை முன்வைத்து தேர்தலில் சுயேச்சையாக களம் காண இருப்பதாகவும், மக்களும், அம்மாவின் ஆன்மாவும் என்னை வெற்றி பெறச்செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: