ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். 2011 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க சார்பில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இவர். 2011-ல் வெற்றி பெற்றபோது முதலில் வருவாய்த்துறை அமைச்சராகவும், பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2016-ல் தோப்பு வெற்றி பெற்றும் எந்த அமைச்சர் பதவியும் கொடுக்கப்படவில்லை. அதிலிருந்து அவர் கடுமையான அதிருப்தியில் இருந்துவந்தார். தோப்பு வெங்கடாசலத்தின் செயல்பாடுகள் கட்சிக்குள்ளேயே பல கோஷ்டிகளை உருவாக்கிவைத்திருந்தது. இந்தநிலையில், அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தோப்பு வெங்கடாச்சலத்தின் பெயர் இடம்பெறவில்லை.
அதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், செய்தியாளர்களைச் சந்தித்தும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும், அ.தி.மு.கவுக்கு எதிராகச் செயல்படமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், நேற்று பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுதவற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனயைடுத்து, அவரை கட்சியிலிருந்து நீக்கி அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கழகத்தின் கொள்கைள - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள காரணத்தாலும் ஈரோடு - புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.