#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்

தவறு செய்த அதிகாரிகளை கண்டறிந்து நீதிமன்றம் களையெடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி இருக்கிறது

news18
Updated: September 21, 2019, 9:42 AM IST
#News18Exclusive | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எவ்வித ஆதாரமும் இன்றி அப்பாவிகளை கைது செய்த போலீசார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய காட்சி
news18
Updated: September 21, 2019, 9:42 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, 428 அப்பாவிகள் மீது வழக்கு தொடர்ந்தது அம்பலமாகி இருக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அரசுக்கு அளிக்க உள்ள பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கிடைத்திருக்கிறது.

2018-ம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்தது.

கடந்தாண்டு மே மாதம் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் 15 மாத கால இடைவெளியில் தூத்துக்குடியில் மட்டும் 14 முறை விசாரணை மேற்கொண்டிருக்கிறது.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், கைதானவர்கள் என 377 சாட்சிகளிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியிருக்கிறது.

காவல்துறை, வருவாய்துறை, சிகிச்சை அளித்த மற்றும் உடல்கூராய்வு செய்த மருத்துவர்களிடம் இனிமேல்தான் விசாரணை ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்


Loading...

அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், இடைக்கால அறிக்கை ஒன்றை விரைவில் தாக்கல் செய்ய முடிவு செய்திருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாகக் கிடைத்துள்ளன.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 18லிருந்து 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலரை போலீசார் உரிய ஆதாரங்களின்றி நள்ளிரவில் கைது செய்திருக்கின்றனர்

அப்படி, கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதுடன், பல்வேறு வகையான குற்ற வழக்குகளையும் அவர்கள் மீது பதிவு செய்துள்ளனர்

இளைஞர்களை கைது செய்ததில் காவல்துறையினர் சட்ட நடைமுறைகளை துளியும் பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டதாக அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆணையம், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு | Thoothukudi shootout
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு


இளைஞர்களின் தனிமனித உரிமைகளைப் பறித்து, தகாத முறையில் நடத்தி, சொல்ல முடியாத வகையில் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 428 பேர் மீது பதியப்பட்ட 244 வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்களுக்கு உடனே தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

பணியில் சேர, உயர்கல்வி படிக்க, வேலைக்காக, வெளிநாடு செல்ல தூத்துக்குடி மாவட்ட போலீசாரிடம் இருந்து இளைஞர்கள் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டியிருக்கிறது.

அதேபோல், போலீசாரால் பாதிப்புள்ளானவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சம் வீதம் மொத்தம் ஆறரை கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது போன்ற முக்கியமான கேள்விகள் குறித்து முழுமையாக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்களின் நிலை மிக மோசமாக இருப்பதை உணர்ந்ததால், இந்த இடைக்கால பரிந்துரைகளை ஆணையம் முன்வைக்க இருக்கிறது. மறுபுறத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ,

தவறு செய்த அதிகாரிகளை கண்டறிந்து நீதிமன்றம் களையெடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி இருக்கிறது.

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...