ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது... தண்டனை நிச்சயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது... தண்டனை நிச்சயம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் பேச்சு

அன்றைய முதல்வர்  பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது- முதல்வர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இன்று சட்டபேரவையில் உரையாற்றிய முதல்வர், “கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி! அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. துயரமும், கொடூரமுமான அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்குச் சென்றேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சியானது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியில் மிகத் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும். இதை மேலும் வலியுறுத்தக்கூடிய வகையில் கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 22-5-2018 அன்று மாபெரும் ஊர்வலத்தை அந்தப் பகுதி மக்கள் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியரிடத்திலே மனு கொடுக்கவே அவர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்னையை அன்றைய அ.தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளைக் கேட்டறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை.

    இதுமட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள்மீது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை கொடுத்திருக்கிறது. அந்தச் சம்பவத்திலே 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தார்கள். 64 பேர் சிறிய அளவிலான காயங்களை அடைந்தார்கள்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; குற்றவாளியை கூண்டில் ஏற்றுக - வைகோ ஆவேசம்

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அன்றைய முதலமைச்சர்  பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அதாவது, அ.தி.மு.க. ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் பலியானது. கேட்பவர் அனைவருக்கும் இரத்தம் உறைய வைக்கக்கூடிய இந்தச் சம்பவம் குறித்து, அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடம் ஊடகங்கள் கேட்டபோது, 'இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியாது; உங்களைப் போல நானும் டி.வி. பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்' என்று பேட்டி அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

    கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில்கொண்டு, 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

    ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள்மீது துறைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர்மீது, துறைரீதியான நடவடிக்கை பொதுத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள்மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு & மேல்முறையீடு) விதிகளின் பிரிவு 17(B)–ன்கீழ் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க:  ‘எதிர்க்கட்சி துணைத் தலைவரே’ என அழைத்து ஓபிஎஸ் பேச வாய்ப்பு அளித்த சபாநாயகர் அப்பாவு

    இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த அவையினுடைய கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பதையும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்’ என தெரிவித்தார்.

    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, Sterlite