ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Thoothukudi Sterlite : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைகோ ஆதரவு

Thoothukudi Sterlite : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வைகோ ஆதரவு

வைகோ

வைகோ

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் தாயரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் தாயரிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

  இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு உரிமத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

  அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, அதிமுக அரசிடம் உரிமம் பெற்று, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொடங்கினார்கள். ஆனால், காற்று, நீர் நிலம் அனைத்தையும் மாசுபடுத்தி, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தியதால், ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பொது நல அமைப்புகளும் தொடுத்த வழக்கில், ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டெம்பர் 28 இல் தீர்ப்பு அளித்தது.

  அதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மீண்டும் வழக்கு, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. ஆலையை மூடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மூடப்பட்டது. தற்போதும், ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. தடை ஆணை நீடிக்கின்றது.

  ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறப்பதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது.

  Must Read :  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் - சீமான் எச்சரிக்கை

  ஆனால், அதே நேரத்தில், ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும். அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது, ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது.” என்று கூறியுள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: MDMK, Oxygen, Sterlite plant, Thoothukudi Sterlite, Vaiko