தூத்துக்குடி அருகே கந்துவட்டி கொடுமை.. ரூ.6 லட்சம் கடனுக்கு ரூ.3 கோடி வரை வட்டி கட்டிய பெண்..

தூத்துக்குடி அருகே கந்துவட்டி கொடுமை.. ரூ.6 லட்சம் கடனுக்கு ரூ.3 கோடி வரை வட்டி கட்டிய பெண்..

6 லட்ச ரூபாய் கடனுக்கு, 3 கோடி ரூபாய் வரை வட்டி கட்டிய பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, நாள், வார மற்றும் மாத வட்டி என வசூலித்த காவலர் மனைவி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரில் பிரவீனா என்பவரிடம் கொடுத்த கடனுக்காக 10 சதவீதம் 40 சதவீதம் வரை கந்து வட்டி வசூலித்த 6 பெண்கள் உள்பட 14 பேர் மீது கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 6 லட்ச ரூபாய்க்கு 3 கோடி ரூபாய் வரை கந்து  வட்டி வசூல் செய்ததது தெரியவந்தது. இதில் காவலர் மனைவியும் ஒருவரும் அடக்கம் என்பது குறிப்பிடதக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி பிரவீனா(30). கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிவீனா கடம்பூரில் உள்ள தனது தந்தை நாராயணன் வீட்டில் இருந்து வருகிறார். பிரவீனா தொடக்கத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் சேர்ந்து பழைய வாகனங்கள் வாங்குவது, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ம் ஆண்டு கயத்தாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முருகன் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். முதலில் 6 பைசா வட்டி கொடுத்து வந்துள்ளார். பின்னர் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியள்ளார். இதற்கும் வட்டி கொடுத்து வந்த நிலையில் பிரவீனா சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த முருகன், 6 பைசா வட்டியை 10 பைசா வட்டி கொடுக்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியல்லமால் பிரவீனா கொடுக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தொழிலும் முடக்கம் ஏற்பட, பிரவீனா வட்டிகொடுக்க முடியமால் பரிதவிக்க, முருகன் வேறு ஒரு நபரை கை காட்டி, அவரிடம் பணம் பெற்று தனது வட்டியை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பிரவீனா அவர் கூறிய நபரிடம் வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் மற்றொருவரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி கொடுக்க வேறு ஒருவரிடம் வாங்கியுள்ளார். இப்படி ஒருவரிடம் வாங்கி மற்றொவருக்கு அடைக்க என 48 பேரிடம் இது போன்று வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு பிரவீனா தள்ளப்பட்டுள்ளார். நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணம் கொடுத்தவர்கள் பிரவீனாவிடம் வாங்க தொடங்கினர்.

வெளியில் சொன்னால் தங்களுக்கு அவமானம் ஏற்படுவது மட்டுமின்றி, வட்டிக்கு  கொடுத்தவர்கள் தங்களை ஏதவாது செய்து விடுவர்களோ என்ற அச்சத்தில் வெளியே சொல்ல முடியமால் பரிதவித்து வந்த பிரவீனா, வேறு வழியில்லமால் தனது 100பவுன் நகை, தனது தாயின் 40பவுன் நகையை விற்பனை செய்தும்,  தனது தந்தையின் சேமிப்பு பணம் 20 லட்சம், தனது சகோதரனின் 19லட்ச ரூபாய் ஆகியவற்றையும் வட்டிக்காக கொடுத்துள்ளார். மேலும் 10சென்ட் நிலத்தினையும் வட்டிக்கு பணம் கட்டி இழந்துள்ளார். இப்படி 6 லட்ச ரூபாய்க்காக 3 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியது மட்டுமின்றி, சிலரின் கடனையும் அடைத்துள்ளனர்.

Also read: வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்த அக்குபஞ்சர் மருத்துவர் - கர்ப்பிணி உயிரிழப்பு!

வாங்கிய முதலுக்கு மேல் பலமடங்கு பணம் வட்டியாக கொடுத்த பிறகும், அதில் 18 பேர் தொடர்ந்து பிரவீனாவை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிலரும் பிரவீனாவிற்கு கடன் கொடுத்துள்ளதால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர்.

மேலும் பிரவீனாவிற்கு ஆதரவாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த சரண்யா, ராணி, அந்தோணி மற்றும் பிரவீனா சகோதரர் வினோபாலா ஆகியோரையும் கந்துவட்டி கும்பல் மிரட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரவீனா மற்றும் சரண்யா, ராணி, அந்தோணி, வினோபாலா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோரிடம் புகார் மனு அளிக்க, இது குறித்து உடனடியாக நடவடிக்கை கடம்பூர் காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

இதையெடுத்து கடம்பூர். காவல் நிலையத்தில் பிரவீனாவிடம் புகார் பெற்று பிரவீனாவை மிரட்டிய முருகன், மகாராஜா, கிருஷ்ணம்மாள், குருவம்மாள், செல்வராணி, செல்வி, சிவசக்திராமன், சிவசக்தி,ராஜா, கங்கா, ராஜேஸ் கண்ணா, தேன்ராஜா, ராம்குமார், ராஜா ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காவல் நிலைய ஜாமீனில் 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசக்தி என்பவருடைய கணவர் நாரயணணன் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிரவீனா வட்டி சரியாக கொடுத்ததை பார்த்த அவருக்கு வட்டிக்கு கொடுத்தவர்களில் சிலர் தங்கள் மட்டும், தங்களது அம்மா, தம்பி, தங்கை மற்றும் உறவினர்கள் என ஒரு கும்பலாக சேர்ந்து பணம் கொடுப்பதும், வட்டி வாங்குவதுமாக இருந்துள்ளார். வாகன விற்பனையில் கிடைக்கும் அத்துணை லாபத்தினையும் வட்டிக்கு பிரவீனா கொடுத்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட வட்டிக்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதும். அவருக்கு வட்டிக்கு கொடுத்தவர்கள் வட்டிக்கு வட்டி என போட்டு பிரவீனாவிற்கு நெருக்கடி கொடுத்தது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை காண்கணிப்பாளரிடம் புகார் அளித்தவர்களில் ஒருவர் ராணி. இவர் கைது செய்யப்பட்ட செல்வராணி மற்றும் மகாராஜா ஆகிய இருவரிடம் பிரவீனாவிற்கு பணம் வாங்கி கொடுத்தவர். இவரிடம் இப்பிரச்சினை குறித்து கேட்ட போது பிரவீனாக்காக செல்வராணியிடம் 25லட்ச ரூபாய் மற்றும் மகாராஜாவிடம் 5 லட்ச ரூபாய் வாங்கி கொடுத்ததாகவும், ஆரம்பத்தில் 10 சதவீதம் நாள் வட்டிக்கு வாங்கி கொடுத்தாகவும், கொரோனா ஊரடங்கு வரை சரியாக வட்டி செலுத்தி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பிரவீனாவினால் வட்டி செலுத்த முடியவில்லை என்பதால், தானும் அவர்களுக்கு வட்டி கொடுத்து வந்தாகவும், பின்னர் வாரம் மற்றும் மாத வட்டியாகவும் மாற்றியுள்ளனர். தற்பொழுது மகாராஜா தொடர்ந்து நெருக்கடி கொடுத்த காரணத்தினால் புகார் கொடுத்தாக கூறியுள்ளார்.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் கந்துவட்டியினால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தாலும், மறுநாளை அவர்கள் வெளியே வருவதால் புகார் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதால் கடுமையான நடவடிக்கை தேவை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கந்து வட்டி என்பது அரசினால் தடைசெய்யப்பட்ட ஒன்று, கந்து வட்டி யாரும் கொடுக்ககூடாது, இதனால் மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது. கந்து வட்டி புகார் வந்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

புகார் கொடுத்த பிரவீனா மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்து போலீசார் விசாரணைக்கு பின்னர் தற்போது வரை வீட்டினை விட்டு வெளியே வரவில்லை, வெளியே வந்தால் பணம் கொடுத்தவர்களால் எதுவும் ஆகிவிடுமோ எனற அச்சத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: