Home /News /tamil-nadu /

'ஒரிஜினல் கருப்பட்டிகளை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் ' - பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை

'ஒரிஜினல் கருப்பட்டிகளை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் ' - பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை

பனைத்தொழிலாளர்கள்

பனைத்தொழிலாளர்கள்

Thoothukudi District : கருப்பட்டியில் போலிகள் அதிகரித்துள்ளதால், இதனை கண்டறிந்து ஒரிஜினல் கருப்பட்டிகளை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் பனை தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாப்பாத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வறட்சி காரணமாக பதநீர் சீசன் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பதநீர் சீசன் நன்றாக இருப்பதால் பனைத்தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கருப்பட்டி தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தாப்பாத்தி, அயன்வடமாலபுரம், அச்சன்குளம், விளாத்திகுளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. இதனை நம்பி ஏராளமான பனைத்தொழிலாளர்களும் உள்ளனர். பலர் மற்றவர்களின் நிலங்களில் உள்ள பனைகளை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பதநீர் சீசன் தொடங்குவது வழக்கம். 6 மாத காலம் பதநீர் சீசன் இருக்கும், பனையில் இருந்து பதநீர், கருப்பட்டி ஆகியவற்றை பனைத்தொழிலாளர்கள் விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர். போதிய மழை இல்லை, வறட்சி காரணமாக கடந்தாண்டு பதநீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கருப்பட்டி உற்பத்தியும் பாதிக்கப்பட்டதால், குத்தகை கூட கொடுக்க முடியமால் பனை தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.



    இந்த நிலையில் இந்தாண்டுக்கான பதநீர் சீசன் கடந்த வாரம் தொடங்கியுள்ளது. பரவலாக மழை இருந்த காரணத்தினால் கடந்த ஆண்டை விட பதநீர் சீசன் பரவாயில்லை என்று பனைத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பனைகளில் உள்ள பாளையில் பதநீர் அதிகளவு வடிய தொடங்கியுள்ளதால் பனைத்தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பதநீர் சீசன் தொடங்கியுள்ளதால் பொது மக்களும், வியாபாரிகளும் பதநீர் வாங்குவதற்கு அதிகரித்துள்ளதாகவும், இந்தாண்டு சீசன் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.



    மேலும் பதநீர் வரத்து அதிகரித்துள்ளதால் கருப்பட்டி தயாரிக்கும் பணிகளையும் பனைத்தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர். கோடைகாலமும் தொடங்கியுள்ளதால் பொது மக்களும் பதநீர் அருந்த நாடிச்செல்வது பனைத்தொழிலாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தினை கொடுத்துள்ளது.



    வறட்சி காரணமாக கடந்த ஆண்டு தொழில் பாதிக்கப்பட்டாலும், இந்தாண்டு சீசன் நல்ல முறையில் தொடங்கியுள்ளதாகவும், அதிகமான மக்கள் பதநீர் அருந்தவும், கருப்பட்டி வாங்கவும் வர தொடங்கியுள்ளதாகவும், தங்களுக்கு 6 மாதம் தான் தொழில் இருக்கும், மற்ற 6 மாதங்களுக்கு வேலை இருக்காது, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்குவது போல தங்களுக்கும் உதவி தொகை வழங்க வேண்டும், மேலும் அரசு பனை தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளதை வரவேற்பதாவும், கருப்பட்டியில் போலிகள் அதிகரித்துள்ளதால், இதனை கண்டறிந்து ஒரிஜினல் கருப்பட்டிகளை நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனை தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Tamil News, Thoothukudi, Tuticorin

    அடுத்த செய்தி