தூத்துக்குடியில் 19 ஆண்டுகளாக பதநீர் விற்பனை செய்வதில் கிடைக்கும் வருமானத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கொடுத்து பள்ளி நடத்தி வருகின்றனர் அந்தோணியார்புரம் கிராம மக்கள்.
தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் அந்தோணியார்புரம். இங்கு பனைமரங்கள் அதிகம் இருப்பதால் இக்கிராம மக்கள் பனை சாா்ந்த தொழில் செய்து வருகின்றனர். முன்பு பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிப்பது பிரதான தொழிலாக இருந்த நிலையில் தற்போது இங்கு பதநீர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
கலப்படம் இல்லாமல் நான்கு வழி சாலையோரம் விற்கப்படும் அந்தோணியார்புரம் பதநீருக்கு அதன் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. சீசன் நேரத்தில் அந்தோணியார்புரத்தை கடந்து செல்லும் மக்கள் பைக், காா்களை நிறுத்தி பதநீரை குடித்து செல்வது வழக்கம்.
இந்த கிராமத்தில் உள்ள ஆர்.சி. நடுநிலை பள்ளியில் மொத்தம் 185 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாகவும், 6,7,8-ம் வகுப்புகள் சுயநிதி வகுப்புகளாகவும் நடைபெற்று வருகின்றன. ஆனால், சுயநிதி வகுப்புகளுக்கு பாடம் சொல்லித் தரும் 3 ஆசிரியர்களுக்கு மாதம் தலா 10 ஆயிரம் வீதம் 30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆசிாியா்களுக்கான ஊதியம் இந்த கிராம மக்கள் பதநீர் விற்று அதன் மூலம் வரும் வருவாயில் கொடுக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே பதநீர் சீசன் இருக்கும். இருந்த போதும் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியம் என்பதால் ஆறு மாதம் பதநீர் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயை வைத்து ஆண்டிற்கு மூன்றரை லட்சம் ரூபாய் மொத்த சம்பளம் 19 ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்.
குன்னூர் தேயிலை தோட்டத்தில் பலத்த வெடி சத்தத்துடன் பறந்து வந்த கார்... என்ன நடந்தது?
இதற்காக தனித்தானியாக பதநீர் விற்காமல் கிராம மக்கள் அனைவரும் இணைந்து கூட்டாக பதநீர் விற்பனை செய்கின்றனா்.
அந்தோணியார்புரம் கிராம மக்களின் கோரிக்கை 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கு ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் நாங்கள் இந்த பள்ளியை ஒன்பது பத்தாம் வகுப்புகளுடன் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி விடுவோம் என்கின்றனர் ஊர்மக்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.