நீதிமன்றம் உத்தரவிட்டும் ஓய்வூதியம் வழங்காத நிலை - பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தும் சுதந்திரப் போராட்ட தியாகி மகள்

Youtube Video

தூத்துக்குடியில் உரிய ஓய்வூதியம் கிடைக்காததால் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் பாத்திரம் கழுவும் நிலையில் உள்ளார்.

  • Share this:
    நீதிமன்றம் உத்தரவிட்டும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகளுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்துவதால், அவர் உணவகத்தில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்துகிறார்.

    தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகரை சேர்ந்தவர் சுதந்திர போராட்டத் தியாகி மாடசாமி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மாடசாமிக்கு தாமரை பட்டயமும், விடுதலை போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு மாடசாமி காலமானதால், அவரது ஓய்வூதியத்தை மனைவி வள்ளியம்மாள் பெற்று வந்தார்.

    கடந்த 2013ம் ஆண்டு வள்ளியம்மாள் மரணம் அடைந்ததால், தந்தைக்கு வழங்கி வந்த ஓய்வூதியத்தை தமக்கு வழங்க வேண்டும் என மாடசாமியின் மகள் இந்திரா, அரசுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். திருமணம் ஆகாத தமக்கு, தந்தையின் ஓய்வூதியத்தை தர வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திராவுக்கு ஓய்வூதியம் வழங்க கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் இந்திரா ஒப்படைத்து பிறகும், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திரா, வேறு வழியின்றி உணவகத்தில் பாத்திரம் கழுவி பிழைப்பு நடத்தி வருகிறார்.

    சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின் போது தம்மை கவுரவிக்கும் மாவட்ட நிர்வாகம், ஓய்வூதியம் வழங்குவதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கிறார் இந்திரா.

    தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்ட போது, இந்திராவின் ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் கேட்ட போது, தமிழக அரசு தரப்பில் எந்த கோப்பும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திராவின் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வந்த பின் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Karthick S
    First published: