மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்

மீன்பிடி படகுகள்

தூத்துக்குடியில் மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021க்கு எதிராக மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்.

 • Share this:
  மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 -ஐ கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரியும் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில்  மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக என்று கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

  இதுகுறித்து  மீனவர்கள் கூறுகையில், “மத்திய அரசின் புதிய மீன்பிடி சட்டத்திருத்த மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால் மீனவர்கள் தர்மம் எடுக்கும் நிலைக்குதான் தள்ளப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடி தொழிலில் லட்சக்கணக்கான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  புதிய மீன்பிடி சட்ட திருத்தத்தின்படி மீனவர்கள் 12 கடல் மைல்குள்ளாகவே தொழில் செய்ய வேண்டும். எந்த மீன் பிடிக்கச் செல்கிறோம் என்பதை கரையில் அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும், குறிப்பிட்ட மீன் வகை தவிர வேறு வகையினை மீனவர்கள் பிடித்திருந்தால் அதை அவற்றை கடலிலேயே விட்டு விடவேண்டும்.

  மீனவர்கள் சட்டத்திருத்த வரைவுகளை மீறி செயல்பட்டால் முதல்முறை அபராதமும், இரண்டு முறை அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும், மூன்றாம் முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மீனவர் மீண்டும் தொழில் செய்ய முடியாதபடிக்கும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கிறது.

  இது மீனவர்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கை. எனவே மத்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய மீன்பிடி சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.

  Must Read : விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2000 இன்று டெபாசிட்!

  இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குமரி மாவட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த  ஆண்கள் மற்றும் பெண்கள், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்  பிரின்ஸ், ராஜேஷ்குமார் உட்பட 300-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசின் தேசிய மீன்வள மசோதா 2021-க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மீன்பிடி சட்டத்திருத்த மசோதா 2021 திட்டத்தை கைவிட கோரி கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  செய்திளாளர் - பி.முரளி கணேஷ், தூத்துக்குடி
  Published by:Suresh V
  First published: