தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அகழாய்வு பணிகள் இன்று துவங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இதனை தொடங்கி வைத்தார்.
முதன் முதலில் அகழாய்வு நடத்தப் பட்ட இடம் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்தான். 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அங்கு அகழாய்வு நடைபெற்றது. 1903 நான்காம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2004 - 05ம் ஆண்டு சத்தியமூர்த்தி குழுவினர் இந்த அகழாய்வை மேற்கொண்டனர்.
அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி துவங்கியுள்ளது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: இந்தியில் அறிவிப்பு-யுபிஎஸ்சி தேர்வு எழுத வந்தவர்கள் அவதி!
அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, “ ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். தற்போது அதற்கான வேலைகள் துவங்கியுள்ளது. ஆய்வு பணிக்காக மத்திய அரசு ரூ.17 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி போதுமானதாக இருக்காது. எனவே, கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், ஹரியானாவின் ராக்கி கார்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், மகாராஷ்டிராவிலுள்ள திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு மின்வெட்டு காலத்தை தமிழகம் தாங்காது: கமல்!
ஐரோப்பாவில் அமைந்துள்ள மியூசியம் போலவே அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடும் வகையில் இந்த அருங்காட்சியம் அமையவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.