தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளாளன் கோட்டை ஊராட்சியில் உள்ள சூரியமணிக்கன் கிராமத்தில் ஞான சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தினை செல்லையா என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இன்று காலையில் தோட்டத்தில் உள்ள மின் மோட்டார் ஓடவில்லை என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து பழுதை நீக்க அந்த கிராமத்தை சேர்ந்த தனியார் எலக்ட்ரீசியன் செல்லத்துரை என்பவரை செல்லையா அழைத்துள்ளார்.
Also Read: ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
மின்சார கம்பத்தில் இருந்து மின் மோட்டார்களை கூடிய வயர் சேதம் அடைந்து இருந்ததால் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து விட்ட செல்லத்துரை மின்கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடிரென மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்தின் வயரில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் .
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று ஜேசிபி இயந்திரம் மூலமாக செல்லத்துரை உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லத்துரை பழுது நீக்கி கொண்டிருக்கும்போது யாரோ திடிரென டிரான்ஸ்பார்மரை ஆன் செய்த காரணத்தினால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி கொடூரமாக வெட்டிக் கொலை ... திருவள்ளூரில் பரபரப்பு
இது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பத்தில் பிரச்சினை என்றால் மின்சார வாரிய ஊழியர்கள் மூலமாக பழுது நீக்கம் செய்ய வேண்டும். ஆனால் மின்சார வாரிய ஊழியர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் டிரான்ஸ்பார்மர் ஆப் செய்துவிட்டு பணியில் ஈடுபட்டதாகவும், அப்போது யாரோ ஒருவர் டிரான்ஸ்பார்மரை ஆன் செய்த காரணத்தினால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.