Home /News /tamil-nadu /

அடாவடி மாமூல்.. தமிழக லாரிகள் ஓட்டுநர்களை தாக்கும் தெலங்கானா கும்பல் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அடாவடி மாமூல்.. தமிழக லாரிகள் ஓட்டுநர்களை தாக்கும் தெலங்கானா கும்பல் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

லாரிகள்

லாரிகள்

Thoothukudi District : தமிழக லாரிகளை மாமூல் கேட்டு தாக்கும் தெலுங்கானா மாநில கும்பல் வாட்ஸ் அப் குழுவைத்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
தெலுங்கானா மற்றும் ஆந்திராவிற்கு பொருள்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு மாமூல் கேட்டு மிரட்டி சில கும்பல்கள் பணம் வசூலித்து வருவதாகவும், தரமறுத்தால் லாரிகள் மற்றும் லாரிடிரைவர்களை தாக்கும் சூழ்நிலை இருப்பதால் தமிழக அரசு உரிய நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்றும் கோவில்பட்டி பகுதி லாரி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் இருந்து தீப்பெட்டி பண்டல், மிளகாய்வத்தல், பருத்தி, உப்பு உள்ளிட்டவைகள் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அதிலும் புதுவை, கேரளா, கர்நாடாகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்படுகிறது.

அதேபோல, அங்கிருந்து தமிழகத்திற்கு தேவையான பொருள்கள் லாரிகள் மூலம் இங்கு கொண்டுவரப்படுகின்றன. தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று, வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், தெலங்கானா மற்றும் ஆந்திராவின் ஒரு சில மாவட்டங்களுக்கு தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் அங்கிருந்து திரும்பும் போது நெடுஞ்சாலைகளில் சில கும்பல்கள் லாரி அசோசியேஷன் என்ற பெயரில் 200 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை தங்களுக்கு மாமூல் தர வேண்டும் என்று லாரி டிரைவர்களிடம் கட்டயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொடுத்தால் மட்டுமே லாரிகளை அங்கிருந்து செல்ல அனுமதிக்கின்றனர். இதனை மீறி லாரி டிரைவர்கள் லாரியை எடுக்க முயன்றால் லாரிகளின் கண்ணாடியை உடைப்பது, லாரி டிரைவர்களை மிரட்டும் பணியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தங்கள் மாநிலத்திற்குள் லாரிகள் எவ்வித பிரச்சினை இல்லாமல் செல்ல வேண்டும் என்பதற்காக மாமூல் வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இறக்கு கூலி என்று 20 ரூபாயில் இது தொடங்கியது என்றும், தற்பொழுது அது 800 ரூபாயில் வந்து நிற்பதாகவும், 15 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் இது போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், ஆனால் தற்பொழுது பணம் தரவில்லை என்றால் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ரசீது


அது மட்டுமல்லாமல், அங்குள்ளவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கள் தனித்தனியாக பிரிந்து ஒரே இடத்திற்கு 2 பிரிவினர் மாமூல் கேட்கும் நிலை இருந்து வருவதாகவும், கொடுக்காமல் வந்தால், டாடா சுமோக்களில் தாதாக்கள் போன்று துரத்தி வந்து லாரியை மடக்கி, தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது என்று லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதுதொடர்பாக அங்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை, மேலும் லாரி புக்கிங் செய்பவர்களும் மாமூல் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல், டீசல், சுங்கசவாடி கட்டண உயர்வு, ஏற்று கூலி, இறக்கு கூலி உயர்வு பல்வேறு நெருக்கடி மத்தியில் தான் இன்றைக்கு லாரி உரிமையாளர்கள் நிலை இருக்கும் போது, மாமூல் என்ற பெயரில்  தங்களை மேலும் வாட்டி வதைக்கும் நிலை இருப்பதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரசீது


இதுகுறித்து கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கணேஷ் கூறுகையில், “மாமூல் கொடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. ஆனால் கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர். அவர்கள் வாட்ஸ் அப் குழு வைத்து, மாமூல் கொடுக்காத லாரி எண்களை கூறுகின்றனர். அந்த கும்பல் டாடா சுமோவில் வந்து மிரட்டுகின்றனர். இதில் சிலர் போலியாக ரிசிபிட் அடித்து மிரட்டும் நிலை உள்ளது. தெலங்கானாவில் உள்ள அனைத்து மாவட்டங்கிளல் இதே நிலை நீடிக்கிறது. கொடுக்கவில்லை என்றால் தாக்குதல் நடத்துகின்றனர். எனவே இப்பிரச்சினையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

தமிழக லாரி தாக்குதல்


லாரி உரிமையாளரும், தலைவருமான சீனிவாசன் கூறுகையில், “சட்டவிரோதமாக தாதாக்கள் போன்று வசூல் செய்கின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டணம் உயர்வு காரணமாக தவித்து வரும் நிலையில் இதுவேறு தங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மேலும் லாரி டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதால் வேலைக்கு வருவதற்கு மறுப்பதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகஅரசு விரைந்து தெலங்கானா மற்றும் ஆந்திரா அரசுகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இனிமேல் தமிழகத்திற்கு வரும் தெலங்கானா, ஆந்திரா லாரிகளுக்கு நாங்கள் மாமூல் வசூல் செய்யும் நிலை ஏற்படும். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Lorry owner association, Telangana, Thoothukudi

அடுத்த செய்தி