தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தையல் இயந்திரம் , மாற்றுத்திறனாளிகள் மூன்றுச்சக்கர சைக்கிள், இஸ்திரி பெட்டி, மருத்துவமனைக்கு தேவையான படுக்கை, பாய், சேலை, கல்வி மற்றும் மருத்துவ உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை சுமார் 750 பயனாளிகளுக்கு பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி, “தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற அடுத்த நாளிலிருந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான்.
மேலும் தென் மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் தூத்துக்குடியில் அமைய உள்ள சர்வதேச பர்னிச்சர் பார்க். இந்த பர்னிச்சர் பார்க் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வருகிற 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார். இதுபோல் தகவல் தொழில்நுட்ப பூங்காவும் தூத்துக்குடியில் அமைய உள்ளது.
தூத்துக்குடி
இந்த திட்டங்களின் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்க திமுக அரசு முழு மூச்சில் செயல்பட்டு வருகிறது. இப்படி மக்களின் உரிமைக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதால் தான் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை மக்கள் தந்துள்ளனர்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் புதிதாக பதவியேற்றுள்ள மாமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : முரளி கணேஷ் ( தூத்துக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.