சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்க வேண்டும் - கோவில்பட்டி கிராம மக்கள் போராட்டம்
சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்க வேண்டும் - கோவில்பட்டி கிராம மக்கள் போராட்டம்
குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம்
Thoothukudi District : தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வரை காத்தியிருப்பு போராட்டத்தினை கைவிட போவதில்லை, அங்கே சமையல் செய்து சாப்பிட போவதாக அறிவித்து போராட்டத்தினை தொடர்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறை அடுத்துள்ள ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க வலியுறுத்தி அக்கிராமம் அருகேயுள்ள குடிநீர் நிரேற்று நிலையத்தினை மக்கள் முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஒரு பெண்மணி திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராமம் ராஜாபுதுக்குடி. இந்த கிராமத்தில் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சீவலப்பேரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் குடிநீரை விலைக்கும் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். வெகு தொலைவிற்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை இருந்த காரணத்தினால் தங்களது கிராமத்திற்கு மீண்டும் சீவலப்பேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களையும், அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
கடந்த மாதம் அரசுக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த போது ஒரு மாதகாலத்தில் குடிநீர் இணைப்பு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விருதுநகருக்கு செல்லும் சீவலப்பேரி குடிநீர் நிரேற்று நிலையத்தில் இருந்து, இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இன்று திடீரென அக்கிராம மக்கள் விருதுநகருக்கு செல்லும் சீவலப்பேரி குடிநீர் நிரேற்று நிலையத்தினை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் குடிநீர் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெண்மணி ஒருவர் திடீரென மயக்கமடைந்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வரை காத்தியிருப்பு போராட்டத்தினை கைவிட போவதில்லை, அங்கே சமையல் செய்து சாப்பிட போவதாக அறிவித்து போராட்டத்தினை தொடர்ந்தனர். இதையெடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக நீரேற்று நிலையத்தில் இருந்து பணிகள் தொடங்கியதும் பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.